4062.

     இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம்
          முழுதும் அளித்தருளித்
     தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப்
          பிள்ளை ஆக்கினையே
     ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய்
          உன்பால் வளர்கின்றேன்
     தளிவேய் நினது புகழ்பாடி ஆடும்
          வண்ணம் சாற்றுகவே.

உரை:

     தெளிந்த ஞான வடிவு உடையவனே! சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமானே! இளிவரலைப் போக்கிச் சிறியவனாகிய நான் எண்ணிய எல்லாம் தந்துதவி என்னை நினக்குச் செல்வப் பிள்ளையாக்கிக் கொண்டாய்: ஒளி பொருந்திய திருமேனி கொண்டு ஓங்குதலை உடையவனே! உன் திருவருளில் வளர்கின்றேனாதலால் என்கண் கோயில் கொண்டருளும் உன்னுடைய அருட் புனலைப் பாடி மகிழ்ந்து ஆடும் நெறியை எனக்குச் சொல்லி யருளுக. எ.று.

     இளிவரல் - தாழ்வு மனப்பான்மை. இது “மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு யாப்புற வந்த இளிவரல்” (தொல். பொ. 254) எனச் சான்றோர் கூறுவர். எண்ணியது எண்ணியவாறு பெற்றவிடத்து இளிவரலால் பிறக்கும் சிறுமை நீங்குவது பற்றி, “எண்ணம் முழுதும் அளித்தருளி என்னை நின் செல்வப் பிள்ளை ஆக்கினாய்” என்று தெரிவிக்கின்றார். அருட் பெருஞ் சோதி வடிவாய் உயர்ந்தோங்கும் இயல்பு பற்றி “ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய்” என்று உரைக்கின்றார். தளி - கோயில்.

     இதனால், சிவனது அருட் பெருஞ் சோதி வடிவத்தின் இயல்பைக் கூறியவாறாம்.

     (6)