4063. மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா
நிலையில் தனியமர்த்திச்
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப்
பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான்
நின்பால் வளர்கின்றேன்
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும்
வண்ணம் செப்புகவே.
உரை: உள்ளெனப்படுவன எல்லாவற்றுள்ளும் சிறந்த பொருளாக இருப்பவனே! சிற்றம்பலத்தை உடையவனே! எனக்கு உளதாகும் மறதி என்னும் குற்றத்தைப் போக்கி என்றும் பொன்றாத உயர்நிலையில் என்னை இருக்கச் செய்து நினக்கு ஒரு செல்வப் பிள்ளை ஆக்கிக் கொண்டாய்; ஆதலால் யான் பிறவித் துன்பம் நீங்கிப் பெரு மகிழ்ச்சி யுற்றுப் பெருமானாகிய நினது திருவருளில் வளரா நிற்கின்றேன். ஆகவே பல தரப்பட்ட பெரிய இவ்வுலகின்கண் நான் உன்னை வாயாரப் பாடி மகிழ்ந்து ஆடும்வண்ணம் எனக்கு அருளுவாயாக. எ.று.
மறதி - மறப்பு என வந்தது. மறதியால் உளதாகும் கேடுகள் பலவாதலால் அதனைப் போக்கினமை விளங்க, “மறப்பே தவிர்த்து” என மொழிகின்றார். மாளா நிலை - சாவாப் பெருநிலை. மறவா நிலையால் சிவயோகம் நீங்காது நிலைபெறுதலால் பிறவிக் கேதுவாகாமை உணர்ந்து, “பிறப்பே தவிர்ந்தேன்” என்றும், அதனால் உளதாகும் பெருமகிழ்ச்சியில் திளைப்பது புலப்பட, “பெருங் களிப்பால் நின்பால் வளர்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். உலகில் மக்களுடைய வாழ்வுக் கூறுகள் பலவகைப் படுவதால் அவற்றின்கண் வீழ்ந்து வருந்தாமல் நின்னைப் பாடியும், மகிழ்ந்தும், கூத்தாடியும் ஒழுகும் வாழ்வு தமக்கு எய்த வேண்டும் என்பதற்காக, “திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும்வண்ணம் செப்புகவே” என்று தெரிவிக்கின்றார்.
இதனால், இறைவனைப் பாடி மகிழ்ந்து இன்புறும் வாழ்வே தாம் வேண்டுவதென விண்ணப்பித்தவாறாம். (7)
|