4064. ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில்
கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம் பலவாநின் செல்வப்
பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வுடையேன் நானே
நின்பால் வளர்கின்றேன்
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும்
வண்ணம் சாற்றுகவே.
உரை: தேன் போல் இனிப்பவனும், சிற்றம்பலத்தை உடையவனுமாகிய பெருமானே! என்னுடைய உடலுக்குள் புகுந்து என் உள்ளத்தைக் கனியச் செய்து உயிரிற் கலந்து ஒன்றாய் நினக்கு என்னைச் செல்வப் பிள்ளை ஆக்கினாய்; அம்முறையில் நான் அழியா வாழ்வுடையவனாய் நின் திருவருளில் வளர்ந்து வருகின்றேன்; ஆகவே நேரிய முறையில் இவ்வுலகில் உன்னை வாயாரப் பாடி மகிழ்ந்து கூத்தாடும் இயல்பு இதுவென எனக்கு உரைத்தருளுக. எ.று.
இனிமைப் பண்பு உடையனாதல் பற்றி, “தேனே” என்று புகழ்கின்றார். இவ்வாறே ஏனைச் சான்றோர்களும், “திருவே என் செல்வமே தேனே வானோர் செஞ்சுடரே” (ஆவடு) உரைப்பது காண்க. உடற்குள் உள்ளமும், உள்ளத்துள் உயிரும் இருக்கின்றன எனச் சான்றோர் வழிவழியாகக் கூறி வருதலால் சிவபெருமான் உடல் புகுந்து, உள்ளம் புகுந்து, உயிருட் கலந்து ஒன்றாய் விளங்குமாற்றால் வடலூர் வள்ளலைத் தமக்குச் செல்வமகனாகக் கொண்டுள்ளான் என்ற கருத்து இனிது விளங்க, “ஊனே புகுந்து என் உளங்கனிவித்து உயிரில் கலந்து ஒன்றாகி நின் செல்வப் பிள்ளை ஆக்கினை” என்று உரைக்கிறார். அழியா வாழ்வு உடையவன் சிவபெருமானாதலால் அவன் தன் உயிரிற் கலந்து ஒன்றாகியிருத்தலால் தமக்கும் அழியா வாழ்வும் உரியது என்பாராய், “நானே அழியா வாழ்வுடையேன்” எனவும், அவ்வுரிமையால் நின் திருமுன் வளர்கின்றேன் என இயம்புவாராய், “நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்” எனவும் மொழிகின்றார். வளர்வதன் பயன் நின் திருப்புகழைப் பாடியும், மகிழ்ந்து ஆடியும் பணி புரிவது என் செய்கடனாதலால் அதனை ஆற்றுதற்கு நினது அருள் இன்றியமையாததாதலால், “உனைப் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே” என்று விண்ணப்பிக்கின்றார்.
இதனால், தாம் அழியா வாழ்வு பெற்றிருத்தல் தெரிவித்தவாறாம். (8)
|