4065.

     ஆரா அமுதம் அளித்தருளி அன்பால்
          இன்ப நிலைக்கேற்றிச்
     சீரார் சிற்றம் பலவாநின் செல்வப்
          பிள்ளை ஆக்கினையே
     ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம்
          பொருந்தி இருக்கின்றேன்
     தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும்
          பணியைத் தெரித்தருளே.

உரை:

     சீர்த்தி நிறைந்த சிற்றம்பலத்தை யுடைய சிவபெருமானே! யாரும் அருந்தி அமையாத திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்குத் தந்தருளி என்பால் கொண்ட அன்பினால் என்னை இன்ப நிலையத்தில் இருத்தி நினக்குரிய செல்வப் பிள்ளை ஆக்கி விட்டாய்; அதனால் மேன்மையான இன்ப அனுபவங்கள் எல்லாம் நான் நிறைந்திருக்கின்றேன்; ஆகவே நீங்குதல் இல்லாத உலகத்தில் அடியரிற் சிறியனாகிய யான் இனிச் செய்யத்தக்க பணிகளை எனக்குத் தெரிவித்தருளுக. எ.று.

     திருவருள் ஞானமாகிய அமுதத்தின் பெறலருமை புலப்பட, “ஆரா அமுதம் அளித்தருளி” என்றும், திருவருள் ஞானத்தின் பயன் குறைவின்றி நிறைந்த சிவபோக நிலையமாதலின் அதன்கண் தம்மைச் செலுத்தி இருக்கச் செய்தமை புலப்பட, “அன்பால் இன்ப நிலைக்கேற்றி” என்றும், இவ்வகையால் தான் சிவனுக்குச் செல்வ மகனாகிய முறைமையை வெளிப்படுப்பாராய், “நின் செல்வப்பிள்ளை ஆக்கினையே” என்றும் இசைக்கின்றார். திருவருள் ஞான இன்பப் பயனை, “ஏரார் இன்ப அனுபவங்கள்” என்று இயம்புகின்றார். சிவப்பேறு எய்துங்காலும் உயிர்கள் இவ்வுலகின் நீக்கமின்றிப் பிறப்பு இறப்புக்களை யுற்று வாழ வேண்டுதலின் இதனை, “தீரா உலகு” என்று செப்புகின்றார். திருவருள் ஞானம் பெற்றவர், இறைவனுக்குரிய ஆன்ம நேயப் பணியை ஆற்றுவது கடனாதலால் அதனைச் செய்தற்கு வேண்டும் நல்லருளை வழங்குதல் வேண்டுமென முறையிடுகின்றமை தோன்ற, “அடிச் சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருள்” என்று விண்ணப்பிக்கின்றார்.

     இதனால், திருவருள் ஞானப் பேற்றுக்கு ஒத்த சிவப் பணி செய்தல் கடன் என்பது குறிப்பாய்ப் புலப்படுத்தியவாறாம்.

     (9)