4066.

     மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும்
          அமுதம் மிகஅளித்தே
     தெய்வப் பதியே சிவமேநின் செல்வப்
          பிள்ளை ஆக்கினையே
     ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன்
          நின்பால் வளர்கின்றேன்
     பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும்
          பணியைப் புகன்றருளே.

உரை:

     தெய்வங்களுக் கெல்லாம் தலைவனாக உள்ளவனே! சிவ பரம்பொருளே! மெய்ம்மைத் தன்மை குன்றாத திருவருள் நிலையத்தின்கண் என்னை உயர்த்தி, அதற்கென்று விளங்கும் ஞானமாகிய அமுதத்தை மிகுதியாக அளித்து என்னை நினக்குச் செல்வ மகனாக்கிக் கொண்டாய்; அதனால் நான் ஐவகை ஆசைகளையும் ஒடுக்குமிடம் அறிந்து குற்றவகை எல்லாம் போக்கி, நின் திருவருள் ஒளியில் வளர்ந்து வருகின்றேன்; அவ்வாற்றால் பொய்ம்மைக்கு இடமாகா தொழிந்தேன்; ஆகவே இவ்வுலகில் நான் இருந்து செய்தற்குரிய பணி வகைகளை எனக்குத் தெரிவித்தருளுக. எ.று.

     தெய்வங்கட் கெல்லாம் தலைமைத் தெய்வமாதலால், “தெய்வப் பதியே” என்று சிவபெருமானைக் குறிக்கின்றார். மெய் வைப்பு - மெய்ம்மைத் தன்மை. திருவருள் நிலைக்கு உயர்த்தி அது நல்கும் ஞானத்தை மிகுதியாக அளித்துச் சிறப்பித்தமை விளங்க, “விளங்கும் அமுதம் மிக அளித்து” என்றும், அதனால் தாம் சிவனுக்குச் சிறந்த மகனாயினமை விளக்குவாராய், “மிக அளித்தே செல்வப் பிள்ளை ஆக்கினையே” என்றும் விளம்புகின்றார். ஐ வைப்பு - ஆசை ஐந்தையும் ஒடுக்குமிடம். புலன்கள் ஐந்தாதலால் அவற்றின் மேற் செல்லுகின்ற ஆசையும் ஐந்தாதலும், அவை ஞான வாய்ம்மைக்கண் சேட்டையின்றி ஒடுங்கிக் கெடுதலை யறிந்து அவ்வழியில் நிற்பது தோன்ற, “ஐவைப்பு அறிந்தேன்” எனவும், ஆசை வழி எய்தும் துன்பங்கள் எல்லாவற்றிற்கும் ஏதுவாகிய பற்றென்னும் குற்றம் கெட்டமை விளங்க, “துரிசெல்லாம் அறுத்தேன்” எனவும் வடலூர் வள்ளல் சொல்லுகின்றார். இவ்வாற்றால் பொய்யும் வழுவும் இனி யான் எய்த மாட்டேன் என அறுதியிட்டு உரைக்கின்றாராதலால், “பொய் வைப்பு அடையேன்” என்று தமது துணிபு இனிது தோன்ற எடுத்துரைக்கின்றார்.

     இதனால், குற்றம் எய்துதற்கு ஏதுவாகிய ஆசையும் பிற குற்றங்களும் போக்கிக்கொண்டு, இறை பணி புரிதற்குரிய பக்குவம் எய்தி உள்ளமை விளக்கியவாறாம்.

     (10)