4068.

     பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா
          தோங்கும் பெருமைதந்து
     சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப்
          பிள்ளை ஆக்கினையே
     திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து
          நயப்ப நிற்கின்றேன்
     அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும்
          பணியை அருளுகவே.

உரை:

     சிறந்தோங்கும் திருச்சிற்றம்பலத்தை யுடைய பெருமானே! உலகில் பிறந்து வாழும் எளியவனாகிய எனக்கு இறந்தும் பிறந்தும் உழலும் அவல நிலையைப் போக்கிப் பிறவாப் பெருமை தந்து என்னை நின்னுடைய செல்வப் பிள்ளை ஆக்கினாய்; அதனால் சிவ ஞானப் பேற்றுக்குரிய செயற் கூறுகளை ஆய்ந்துணரும் முனிவர்களும் தேவர்களும் என்னை நோக்கி என்பால் விருப்பம் கொள்ளுமாறு ஒளிர்கின்றேன்; ஆகவே அறம் செய்தற்கமைந்த இவ்வுலகில் இப்பொழுது அடியவனாகிய யான் செய்தற்குரிய சிவப் பணியை எடுத்தோதி அருளுக. எ.று.

     நிலவுலகில் பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் இயல்பாதலின், அவ்வியல்பு பற்றி யான் மண்ணுலகில் பிறந்துள்ளேன் என்றற்கு, “பிறந்தேற்கு” எனவும், இனித் தமக்கு எய்தக் கடவப் பிறப்பிறப்புக்களினின்றும் என்னை உய்வித்தாய் என்று கூறுவாராய், “என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து என்னை நின் செல்வப் பிள்ளை ஆக்கினை” எனவும் தெரிவிக்கின்றார். செய்வார் செய்வினைக் கூறுகளையும், அதற்குரிய ஞான நலன்களையும் தெரிந்துணர்ந்து ஊக்குபவர்களாதலின், “திறந்தேர் முனிவர் தேவர்” என்றும், அவர்கள் என்னுடைய அறிவு செயல் நலங்களை அறிந்தாய்ந்து ஊக்குவிக்கின்றனர் என்று உரைப்பாராய், “எல்லாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்” என்றும் இசைக்கின்றார். ஆகவே நான் இனிச் செய்தற்குரிய பணிகளை விளக்கி அருளுதல் வேண்டுமென முறையிடுவாராய், “அறந்தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே” என விண்ணப்பிக்கின்றார்.

     இதனால், முன்னைய பாட்டுக்களைப் போலச் செய்பணி தெரிவித்தருளுமாறு வேண்டிக் கொண்டவாறாம்.

     (12)