55. ஆன்ம தரிசனம்
அஃதாவது, ஆன்மாவாகி தான் ஏனைத் தத்துவக் கூறுகள் அனைத்தையும் தேர்ந்துணர்ந்து, தாம் அவற்றின் வேறு என்பது உணர்ந்து, அவனது திருவருளின் துணையின்றித் தான் ஒன்றும் செய்யமாட்டாமையை இனிது உணர்ந்து, தன்னை அவனருளில் தோய்வித்தல். ஆயினும் சைவ நூல்கள் கூறும் ஏகனாதலும், இறை பணி நிற்றலும் எல்லாப் பாட்டுக்களிலும் உரைக்கப்படுகின்றன. ஆன்ம ஞானத்தால் ஆன்மாவிற்குத் தன் செயலென ஒன்று இல்லை என்பது உணரப்படுவது பற்றி இப்பகுதியை ஆன்ம தரிசனம் என்பதும் பொருத்தமேயாகும்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4069. திருஎலாம் தரும்ஓர் தெய்வமாய் ஒருவன்
திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
உளஎலாம் ஆங்கவன் தனக்கே
தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
செயலிலேன் எனநினைத் திருந்தேன்
அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
உரை: நலங்கள் எல்லாவற்றையும் தரும் ஒப்பற்ற தெய்வமாகிய முதல்வன் ஒருவன் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்றான்; உருவங்கள் எல்லாவற்றோடும், உணர்வு, உடல், பொருள், உயிர் முதலாக உள்ளன எல்லாவற்றையும் அப்பெருமானுக்கே உரியவை என நாட்டவர் அறியக் கொடுத்து விட்டேன்; இனி வேறே எனக்கெனச் செயலொன்றும் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கின்றேன்; அருவம், அருவுருவம் எனப்படுவன அனைத்தையும் உடைய பெருமானே! இது நீ நன்கறிந்தது; ஆதலால் நான் உனக்கு அடிக்கடி உரைப்பது எற்றுக்கு? எ.று.
செல்வத்தாலும் திருவருளாலும் எய்தப்படும் நலங்கள் யாவும் திரு என்ற சொல்லினுள் அடங்குதலின் நலம் பலவற்றையும் தொடுத்து, “திரு எலாம் தரும் தெய்வமாம் ஒருவன்” என்று சிவ பரம்பொருளைக் குறிக்கின்றார். அப்பெருமான் கூத்தப் பெருமானாய் அருளுருக் கொண்டு சிற்றம்பலத்தில் காட்சி தருகின்றானாதலால், “திருச்சிற்றம்பலம் திகழ்கின்றான்” என்று தெரிவிக்கின்றார். நிறத்தாலும், குணஞ் செயல்களாலும் மக்கள் உரு பலதிறப்படுதலின், “உரு எலாம்” எனவும், தன்னுடையவை என உயிரால் கருதப் படுபவையாதலால், “உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம்” எனவும் உரைக்கின்றார். இவற்றின் செயல் வழி நில்லாது இவற்றைத் தந்த இறைவனே இவற்றிற்கு முதல்வன் என்பதற்கு, “அவன் வயம் நிற்றல் தன்னை அவனுக்குக் கொடுத்தல்” என நூல்களில் கூறப்படும். “நாமவல்ல விந்திரியம் நம் வழியினல்ல வழி நாமல்ல நாமும் அரனுடைமை” (சிவபோ) என்று சான்றோர் கூறுவது காண்க. இதனை, “ஏகனாகி இறை பணி நிற்றல்” என்றும் கூறுவர். தாம் ஏகனாகி இறை பணி நிற்கும் தன்மையை வடலூர் வள்ளல், “உள எலாம் ஆங்கவன் தனக்கே தெரு எலாம் அறியக் கொடுத்தனன்” என்று கூறுகின்றார். இக்கருத்தையே அருணந்தி சிவனார், “உலகினில் என்செயல் எல்லாம் உன் விதியே நீயே உண்ணின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கு இன்றுன் செயலே என்றும் நினைவார்” (சிவசித்தி) என்று விளக்குவது காண்க. தெரு எலாம் அறியக் கொடுப்பதாவது, ஊரில் உள்ளவரும் நாட்டில் உள்ளவரும் அறிந்து கொள்ளுமாறு ஒழுகுதல். தாம் ஏகனாகி நிற்கும் திறத்தை இறைவன் நன்கறிந்துள்ளான் என்பது புலப்பட, “நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்ப தென் நினக்கே” என மொழிகின்றார்.
இதனால், தனது நினைவு, சொல், செயல் யாவும் இறைவனுடைய நினைவும், சொல்லும், செயலுமாம் என இறைவனோடு ஒன்றி நிற்கும் திறம் எடுத்தோதியவாறாம். (1)
|