4071. களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
தெளித்தனன் செய்கைவே றறியேன்
ஒளித்திரு உளமே அறிந்ததிவ் வனைத்தும்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
உரை: என் மனத்தில் மகிழ்ச்சி உண்டான போதெல்லாம் நின்னுடைய இன்ப இயல்புகளை உணர்ந்து மகிழ்ச்சி கொண்டேன்; கவலை தோன்றி வருத்திய போதெல்லாம் நின் திருவருளையே நினைந்து கண்களில் நீர் சொரிந்தேன்; கலக்கமுற்று என்பால் வந்தவரோடு உசாவி, அவரது கலக்கத்தைப் போக்கி அறிவு தெளிவுறச் செய்த போதெல்லாம் நினது திருவருளின் திறத்தையே எடுத்தோதி அவர்களைத் தெளியச் செய்தேன்; வேறு செய்கை ஒன்றும் செய்திலேன்; இவை யனைத்தும் ஒளிமயமான உன்னுடைய திருவுள்ளம் நன்கறியும்; ஆதலால் நான் அடிக்கடி உரைத்துக் கொள்வது எற்றுக்கு? எ.று.
மகிழ்தலும், கவலையால் துயர்தலும் மனத்துக்கு இயல்பாதலால் களிப்புற்றபோது எய்திய தமது மன வியல்பை, “களித்த போதெல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன்” எனவும், துயருற்று மனம் கலங்கிய போதும் இறைவன் திருவருளையே நினைந்தொழுகிய திறத்தை, “கண்கள் நீர் ததும்பித் துளித்த போதெல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன்” எனவும் இயம்புகின்றார். மகிழ்ச்சிக்காலத்தில் நினையா தொழியினும், துன்பக் காலத்தில் அறிவு சோர்வுற்று அறிந்தோரை அணுகிக் கவலைகளை எடுத்தோதித் தெளிவு காண்பது மக்கள் இயல்பாதலால், வள்ளற் பெருமானிடத்திற் கவலை மிக்கு வந்தவர்களை அளவளாவி மனம் தெளிவு பெறச் செய்த செயலை விளக்குதற்கு, “சூழ்ந்தவர் உளத்தை தெளித்த போதெல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன்” என்று உரைக்கின்றார். தமது உரையை யாப்புறுத்தற் பொருட்டு, “செய்கை வேறறியேன்” என்று செப்புகின்றார். அருட் பெருஞ் சோதி ஆண்டவனாதலால், “ஒளித் திருவுளமே” எனப் பாராட்டுகின்றார்.
இதனால், உவகையும் கவலையும் உற்றபொழுது வடலூர் வள்ளல் திருவருளே நினைவாக இருந்தமை தெளிவித்தவாறாம். (3)
|