4072. உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
குறிப்பினில் குறித்ததொன் றிலையே
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
உரை: உண்பன மனம் பொருந்தி மகிழ்ந்ததும், பின்பு உறங்கியதும், உறங்கி விழித்ததும், உலகியல் உணர்வுகொண்டு பொருட்களைக் கண்டதும், அவற்றின் கவின் கருதி உவந்ததும், கலைகள் பலவற்றைக் கற்றதும், கற்றவற்றைப் பிறர்க்கு உரைத்ததும், உரைக்குமிடத்துச் சுவை கண்டு அன்புற்றதும் எல்லாம் நின் திருவருளோடன்றி யான் தனித்து என் குறிப்பின் வழிக் கருதியது ஒன்றும் இல்லை; ஒண்மை பொருந்திய உனது திருவுள்ளம் இவை யெல்லாம் அறிந்ததாகும்; அங்ஙனமிருக்க, யான் அடிக்கடி தெரிவிப்பது எற்றுக்கு? எ.று.
உண்பனவற்றை விரும்பி உண்பதும், உண்டபின் களைப்பு நீங்க உறங்குவதும் நாளும் நிகழும் செயல்களாதலின் அவற்றையும் தான் திருவருள் உணர்வோடு செய்தமை புலப்படுத்தற்கு, “உண்பதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும்” எடுத்துரைக்கின்றார். விழித்திருக்கும் நிலையில் உலகியல் வாழ்வின்கண் கருத்துப் படர்வதால் அதற்கேற்பக் காண்பன காண்பதும், கருதுவன கருதுவதும், நல்லன கண்டு மகிழ்வதும் பிறவும் நிகழ்வதால், “கண்டதும் கருதிக் களித்ததும்” கூறுகின்றார். அதே நிலையில் கற்பன கற்பதும், பிறர்க்குக் கற்றவற்றை உரைப்பதும் கல்வியின் செயலாதல் பற்றித் தானும் அவ்வாறு செய்தமை விளங்க, “கலைகள் கற்றதும் கரைந்ததும்” மொழிகின்றார். இச் செயல்களினிடையே அழகிய பொருள்களைக் காணுமிடத்தும், கேட்குமிடத்தும், தானே எண்ணி அறியுமிடத்தும் பொருள்களின்பால் இச்சை உண்டாதலின், “காதல் கொண்டதும்” சொல்லுகின்றார். கற்பன கற்குமிடத்தும், கேட்குமிடத்தும், ஆராயுமிடத்தும் இன்பம் தோன்றி மேலும் மேலும் அவற்றின்பால் ஆர்வம் எழுவது பற்றி இவ்வாறு கூறுகின்றார். “தான் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” (குறள்) என்று சான்றோரும் கூறுவது காண்க. இவை யனைத்தும் உயிர்க்கு உறுதி வேண்டிச் செய்யப்படுவன வாயினும், இவற்றையும் இறைவன் திருவருளோடு ஒன்றி யிருந்து செய்தமை பற்றி, “நின்னோ டன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்றிலை” எனவும், இதுதானும் இறைவன் அறிந்தது என்றற்கு, “உனது திருவுளம் அறிந்தது” எனவும் உரைக்கின்றார்.
இதனால், உண்பது முதலிய உறுதி பயக்கும் செயலனைத்தும் திருவருளோடு ஒன்றி நின்று செய்தமை தெரிவித்தவாறாம். (4)
|