4074.

     திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
          சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
     உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
          உவப்பிலேன் உலகுறு மாயைக்
     கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
          கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
     அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
          அடிக்கடி உரைப்பதென் நினக்கே.

உரை:

     பொட்டிட்ட ஒளி பொருந்திய நெற்றியை யுடைய மகளிரை நான் கனவிலும் சிறிதும் விரும்பினதில்லை; இந்த உலக வாழ்விலும் ஓர் அணுவளவும் விருப்பம் கொண்டிலேன்; உலகியல் செய்யும் மாயையால் விளையும் கலக்கமும் துன்பமும் நீங்கும் காலம் எப்பொழுது எய்துமோ என்று வருந்திக் கொண்டிருக்கிறேனே யன்றி வேறில்லை; அளவில்லா ஆற்றல் உடையவனே! எனது இக்கருத்து நீ நன்கு அறிந்ததாதலால் நான் அடிக்கடி சொல்லுவது எற்றுக்கு? எ.று.

     உலகியல் விளைவிக்கும் ஆசைகளில் மகளிரின்மேல் உளதாகும் ஆசை ஏனைய ஆசைகள் எல்லாவற்றினும் முந்தும் வலிமை உடையதாதலால் அதனை முற்பட எடுத்து, “திலக வாள் நுதலார்தமைக் கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன்” என்று மொழிகின்றார். உலக வாழ்வில் பொன்னும் பொருளும் போகமும் தோன்றி வாழ்வாரை வாழ்வின்கண் பிணித்தலால் அதுவும் துன்ப மயமாதல் பற்றி, “இந்த உலக வாழ்வதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன்” என்று கூறுகின்றார். மாயைக் கலக வாதனை - மயக்கம் விளைவிக்கும் கலக்கங்களும் துன்பங்களும். கலக்கம் - கலகம் என வந்தது. வாதனை - துன்பம். உலகம் மாயா காரியமாதலின் தன்கண் வாழ்வாரது அறிவை மயக்கித் துன்பங்களை எய்துவித்தல் உலகுக்கு இயல்பென அறிக. கலக வாதனை - உயிரின் இயற்கை அறிவைச் சோர்வுறச் செய்தலின், அது நீங்கும் காலம் என்று வருமோ என்று ஏங்குவது ஆன்மாக்களின் இயல்பு. துயர்ந்திருந்தேன் - துயர் என்றன் வினையடியாகப் பிறந்த வினை. துயருற்றேன் என்பது பொருள். வரம்பி லாற்றல் உடையவனாதலால் இறைவனை, “அலகிலாத் திறலோய்” என்று கூறுகின்றார். அலகு - அளவு.      இதனால், திருவருளில் ஒன்றி யிருக்கும் வள்ளலாரின் திருவுள்ளம் உலகியல் பற்றி நினைத்திருந்த திறம் தெரிவித்தவாறாம்.

     (6)