4075.

     சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
          சாத்திரக் குப்பையும் தணந்தேன்
     நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
          நித்திய வாழ்க்கையும் சுகமும்
     ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
          அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
     ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
          உரைப்பதென் அடிக்கடி உனக்கே.

உரை:

     சாதி சமயக் கொள்கைகளை விட்டொழிந்தேன்; அவற்றை விதிக்கும் சாத்திரத் தொகுதிகளையும் கை யொழிந்தேன்; நீதி முறையும், வாழ்க்கை நிலையும், மெய்ப் பொருளும், நிலைத்த வாழ்வும், வாழ்க்கை இன்பமும், தோற்றமும், இடையும், ஈறும் இல்லாத அருட் பெருஞ் சோதியேயாம் என்று தெளிந்து கொண்டேன்; இங்கே யான் சொன்ன அனைத்தும் நீ அறிந்தவையாதலால் நான் அடிக்கடி உனக்கு முறையிடுவது எற்றுக்கு? எ.று.

     மதம் - கொள்கை. ஒவ்வொரு சமயத்திலும் கொள்கையில் பலவாதலால் அவற்றை மதம் என வழங்குவர். சாதிதோறும் ஒழுக்கமும், உள்ளப்பான்மையும், சூழ்நிலையால் வேறுபடுதலின் அதனை வேறு வைத்து விளம்புகின்றார். சாதியும், மதமும், சமயங்களும் மக்களினத்தை ஒன்றுபடுத்தாது வேறுபடுத்துவது பற்றி, “சாதியும், மதமும், சமயமும் தவிர்ந்தேன்” என்று கூறுகின்றார். ஒரு சாதிக்குள்ளே சமயங்களும் மதங்களும் வேறுபட்டு அவர்களைத் தனித் தனியாகப் பிரிந்தொழியச் செய்தலால், “தவிர்ந்தேன்” என எடுத்து மொழிகின்றார். சாதி சமய வேறுபாடுகளைத் தோற்றுவித்துப் பிரிந்து நின்று வாழ்தற்குரிய சூழ்ச்சிகளையும் வகைகளையும் எடுத்துரைப்பதால் சாத்திரங்கள் ஒன்றோடொன்று ஒவ்வாமல் ஒருமை நிலைமைக்கு ஊறு செய்வதால், “சாத்திரக் குப்பையும் தணந்தேன்” என்று சலித்து உரைக்கின்றார். தணத்தல் - நீங்குதல். யாவர்க்கும் ஒத்த நீதியும் ஒத்த நிலைமையும், யாவர்க்கும் பொதுவாய் நிற்கும் மெய்ப்பொருளும், நிலைத்த வாழ்வும், அவ்வாழ்க்கை வழி எய்தும் நலமும் மக்களினத்தின் ஒருமித்த வாழ்வுக்கு உறுதியாதலால் அவையே வேண்டும் என்றற்கு, “நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் அருட் பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார். திருவருள் ஞான ஒளியே தனக்கு உருவாகக் கொண்டதாதலின் சிவ பரம்பொருளை, “அருட் பெருஞ் சோதி” என்கின்றார். அதற்குத் தோற்றமும் நடுவும் கேடும் இல்லை என்பது பற்றி, “ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் சோதி” என்று விளக்குகின்றார். அருட் பெருஞ் சோதியே முழுமுதலாகக் கொண்டமையின் அதுவே எல்லாம் என வடலூர் வள்ளல் கருதுகின்றமை காண்க.

     இதனால், அருட் பெருஞ் சோதி ஒன்றொழிய ஏனைய அனைத்தையும் பொருள் எனக் கொள்ளாதொழிந்தமை புகன்றவாறாம்.

     (7)