4076. பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க
சங்கம்என் றோங்குமோ தலைமைச்
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ
தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த
துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
உரை: பித்து வகைகள் எல்லாவற்றையும் உடைய உலக மக்களின் கலகம் விளைவிக்கும் பிதற்றுரைகள் எல்லாம் என்று நீங்குமோ? சத்தாகிய பொருளனைத்தும் மெய்ம்மை உணர்வார்க்கு ஒன்றென்று உணர வல்ல சன்மார்க்க சங்கம் எக்காலத்தும் இவ்வுலகில் ஓங்கி நிற்குமோ? தலைமை பொருந்திய சித்துச் செயல்கள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தனாகிய சிவ பெருமான் எப்போது எழுந்தருளுவானோ; இவற்றுள் ஒன்றையும் நான் அறிகிலேன் என வருந்தினேன்; எல்லாவற்றையும் ஓரொப்ப உன்னுடைய திருவுள்ளம் நன்கு அறியுமாதலால் நான் உனக்கு அடிக்கடி முறையிட்டு உரைப்பது எற்றுக்கு? எ.று.
உலகில் பித்தேறினார் பலவகை உளராதலால் அவர் எய்திய பித்து வகைகள் எல்லாம் அடங்க, “பித்தெலாம்” எனத் தொகுத்துரைக்கின்றார். சாதிப் பித்து, சமயப் பித்து, பொருள் பித்து, கொள்கைப் பித்து, காமப் பித்து எனப் பித்து வகை மிகப் பலவாதலால் இவ்வாறு கூறுகின்றார். பித்துக் கொண்டவர்களின் பேச்சுக்களில் தெளிவில்லாமையால் அவற்றைப் “பிதற்றல்” என்று பேசுகின்றார். இப்பிதற் றுரைகளால் ஆன்ம நேய ஒருமை யுணர்வு சிதைந்து கெடுவது எண்ணி இவை எப்பொழுது ஒழிந்திடுமோ என ஏங்குகிறார். சத்து - உளதாம் தன்மை; என்றும் உளதாம் தன்மையை யுடைய பொருள். பல தன்மைகளை உடையதாதல் இல்லாமையால் சத்துப் பொருளையே தேர்ந்தொழுகும் நன்னெறியை, “சன்மார்க்கம்” என்று உரைக்கின்றார். சத்தாகிய பொருளைத் தேறும் நெறி நிலை பெற்றாலன்றி மக்களினத்தில் வேற்றுமையின்மையால் உளவாகும் துன்பங்கட்கும் பூசல்கட்கும் இடமின்மையை எண்ணி, “சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ” என்று விழைகின்றார். அணிமா முதலிய எண்வகைச் சித்துக்களையும் செய்ய வல்ல யோகிகட்கெல்லாம் தலைவனாதலின் இறைவனை, “சித்தெலாம் வல்ல தலைமைச் சித்தன்” என்று சிவபெருமானைக் குறிக்கின்றார். அப்பெருமான் தன்பால் எழுந்தருளுவதை நாளும் தான் எதிர்பார்த்திருக்கின்றமை புலப்பட, “என்று உறுமோ தேர்ந்திலேன்” என்றும், இவ்வாறு பலவும் எண்ணி வருந்துகின்றமை பற்றி, “துயர்ந்திருந்தேன்” என்றும் சொல்லுகின்றார்.
இதனால், சன்மார்க்க சங்கம் உயர்ந்தோங்க வேண்டுமென வடலூர் வள்ளல் விழைவது தெரிவித்தவாறாம். (8)
|