56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
அஃதாவது, சன்மார்க்க நெறியில் நிற்பவர் விரும்பத் தகுவன இவை என இறைவன் திருமுன் விண்ணப்பித்தலாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4079. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
உரை: அப்பனே! நான் வேண்டிக் கொள்வனவற்றை அன்பு கூர்ந்து கேட்டு அருள் செய்ய வேண்டுகிறேன்; நான் உயிர்கட்கெல்லாம் அன்பு செய்பவனாக வேண்டும்; எவ்வுலகத்தும் எத்தகைய நிலைகட்கும் எவ்விடத்திற்கும் நான் சென்று எனக்குத் தந்தையாகிய நின்னுடைய அருள் நிறைந்த புகழை எடுத்தோத வேண்டும்; நூல்களால் சொல்லப்படாத மேன் மேல் உயர்ந்த நிலைக்குரிய சுத்த சிவ நெறி விளங்கி மேம்பட நின்னுடைய அருள் ஒளியைப் பரப்புதல் வேண்டும்; யான் ஏதேனும் தவறு செய்வேனாயினும் நீ பொறுத்தருளுதல் வேண்டும்; இவற்றோடு தலைவனாகிய நின்னை விட்டுப் பிரியாத நிலைமையையும் அருள வேண்டுகிறேன். எ.று.
உலகில் உயிர்கள் எண்ணிறந்தனவாதலால் அவற்றை, “ஆருயிர் கட்கெல்லாம்” என்று குறிக்கின்றார். நாடுகளும், நாட்டின் நிலைமைகளும் பலவேறு திறத்தனவாதலால் அவற்றை, “எப்பாரும் எப்பதமும்” என்று சுட்டுகின்றார். ஓதுவார்க்கு நிரம்பிய திருவருட் செல்வத்தை நல்குவது பற்றி இறைவன் புகழை, “அருட் புகழ்” என்று உரைக்கின்றார். ஞான நாட்டத்தால் கண்டு எய்துதற்குரிய சிவபோக நிலை, “செப்பாத மேனிலை” எனப்படுகிறது. அதுவே உயிர்களால் பெறுதற் குரியதாதலின் அதற்குரிய நெறி, “சுத்த சிவ மார்க்கம்” எனக் குறிக்கப்படுகிறது. சிவ மார்க்கத்தை அறிந்து சென்றடைதற்குத் திருவருள் ஞான ஒளி இன்றியமையாமை பற்றி, “திகழ்ந் தோங்க அருட் சோதி செலுத்தி யிடல் வேண்டும்” என்று செப்புகின்றார். திகழ்தல் - விளங்குதல். சிவ நெறியினும் மேலானது பிறிதின்மை தோன்ற, “மேல் சுத்த சிவமார்க்கம்” என்று கூறுகின்றார். சிவ மார்க்கம் - சிவஞானத்தால் எய்துதற்குரிய சிவபோகத்தைப் பெறும் நெறி. அந்நெறியின்கண் கடைபோகச் சென்று சேருதற்கு அருள் ஒளி வேண்டியிருத்தலின், “சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட் சோதி செலுத்துக” என விண்ணப்பிக்கின்றார். முக்குண வயத்தால் தவறு செய்தல் உயிர்கட்கு இயல்பாதலால், “தப்பேது நான் செயினும்” எனவும், தப்பும் தவறும் உயிர்க் குணவியல்பால் உளவாவன என்று எண்ணிய வழிப் பொறுக்கும் பண்பு இடையீடின்றித் தோன்றுதலின், “நீ பொறுத்தல் வேண்டும்” எனவும், தலைவனாகிய சிவனைப் பிரியா தொழுகும் நிலையில் நிலவும் சிவவொளியால் உயிரின்பால் தவறு நிகழா தென்பது பற்றி, “தலைவ நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே” எனவும் இயம்புகின்றார்.
இதன்கண், வேண்டுவன எய்திய வழிச் சன்மார்க்க நெறி எளிதில் கைகூடும் என்பது உய்த்துணரத் தெரிவித்தவாறாம். இக்கருத்தையே இனிவரும் பாட்டுக்களிலும் உரைத்துக் கொள்க. (1)
|