4081. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்டுவத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
உரை: தலைவனாகிய பெருமானே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளை ஏற்றருளல் வேண்டும்; அழிவில்லாத ஒப்பற்ற ஞான வடிவத்தை யான் அடைதல் வேண்டும்; அதனால் எப்பொருளின் கண்ணும் எவ்விடத்தும் நான் உன்னைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதும், ஏனை மக்களால் காணப்படாத உன் அருட் காட்சி எல்லாவற்றையும் கண்டு இன்புற வேண்டும்; மேலும் நான் உன்னையே பொருளாகக் கொண்டு பண்ணிறைந்த பாடல்களைப் பாடி மேலான ஆனந்தக் கூத்தினை ஆட வேண்டும்; ஏனை உயிர்கள் அடைகின்ற துன்பத்தை உள்ளவாறு அறிந்து போக்குதல் வேண்டும்; இதற்கு ஏதுவாக உன்னை நீங்காது உறையும் நிலைமையை அருளுமாறு வேண்டுகிறேன். எ.று.
அண்ணன் - தலைவன். இது அண்ணா என விளி யேற்றது. சிவானந்தத்தை நுகர்தற்குரிய ஞான வடிவம் எய்த வேண்டுகின்றாராதலால் அதனை, “தனு வடிவம்” என்றும், அஃது என்றும் அழியாத சிறப்புடைய தென்றற்கு, “அழியாத தனி வடிவம்” என்றும் குறிக்கிறார். இதனைச் சேக்கிழார் பெருமான், “நண்ணரிய சிவானந்த ஞான வடிவம்” (திருநாவுக்) என்று கூறுகின்றார். ஞான வடிவம் பெற்ற விடத்துச் சிவத்தின் எங்கும் நிறைந்த இன்ப வடிவம் காணப்படுதலால், “கண்ணார நினை எங்கும் கண்டுவத்தல் வேண்டும்” எனவும், ஞானக் கண்களால் காணலுறும் காட்சி மற்றைய ஊனக் கண்ணால் யாவராலும் காணப்படாமை பற்றி, “காணாத காட்சி எலாம் கண்டு கொளல் வேண்டும்” எனவும் கட்டுரைக்கிறார். பண் பொருந்திய பாடல்களையே பரமன் விரும்புகின்றான் என்பது பற்றி, “பண்ணார” என்றும், பரமன் ஒருவனே பாட்டின் பொருளாக அமைதல் வேண்டும் என்றற்கு, “நின்றனையே பாடியுறல் வேண்டும்” என்றும் இயம்புகின்றார். “பண்ணொன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்” (புள்ளிருக்கு) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. பாட்டின் பொருளும் இசையும் பாடுவார் உள்ளத்தை மயக்கி ஆடச் செய்தலின், “பரமானந்தப் பெருங் கூத்தாடியிடல் வேண்டும்” என்று பகர்கின்றார். துன்புறும் உயிர்களைக் கண்ட விடத்து அதற்கேதுவாகிய அவற்றின் உள்ளத்திருந்து நோய் செய்யும் காரணங்களையும் கண்டறிந்து துயர் தீர்த்தல் முறையாதலின், “உள்நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும்” என்றும், அச்செயல் கைக்கொள்ளுதற்கு இறைவனது பிரியா உறவின் இன்றியமையாமை பற்றி “உனைப் பிரியாது உறுகின்ற உறவது வேண்டுவனே” என்றும் உரைக்கின்றார். (3)
|