4082. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
உரை: தந்தையே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளை ஏற்று எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்; அருட் பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானத்தை அடியேன் பெற்று மனமகிழ்தல் வேண்டும்; இறந்தவர்களை இவ்வுலகில் மீட்டும் உயிருணர்வு உடையவர்களாக எழுப்பி இவ்வுலகில் வாழ்வித்தல் வேண்டும்; வாழுமிடத்தும் அவர்கள் நின் அருட் சபைக்கு அடிமைகளாய் உலாவச் செய்தல் வேண்டும்; ஒப்பவர்களும் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் யாவரும் வேற்றுமையின்றி ஒருமை மனப்பான்மை உடையவர்களாய் உலகியலில் வாழ்தல் வேண்டும்; எவ்வகையாலும் அழிதல் இல்லாத உன்னுடைய ஞானவடிவத்திலே நானும் கலந்து எந்தையாகிய நீயும் நானும் ஒன்றாக இனிது அமைந்திருக்க வேண்டுகிறேன். எ.று.
அத்தன் - தந்தை. ஞானமாகிய நன்பொருளை நல்குவதால் தந்தைக்கு அத்தன் என்பது பெயராயிற்று. திருவருள் ஞானப் பேறு இன்ப வாழ்வுக்கு ஏதுவாதலால், “அருட் பெருஞ் சோதியைப் பெற்றே அகங் களித்தல் வேண்டும்” என்று கூறுகின்றார். செத்தார் - இறந்தவர். இறத்தல் - துன்பம் தருவதாகலின், “செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்” என்று வேண்டுகின்றார். “சாதலின் இன்னாதது இல்லை” (குறள்) என்று சான்றோர் கூறுவது காண்க. உயிருணர்வு பெற்றவர்கள் மீளவும் இறப்புத் துன்பத்திற்கு ஆளாகாதவாறு வாழ்தற்கு வழி உரைப்பாராய் அவர்கள் அருள் நடனம் புரியும் திருச்சிற்றம்பலத்திற்கு அடிமைகளாய் அடிப் பணி புரிதல் என்றற்கு, “திருச்சபைக்கே அடிமைகளாகச் செய்வித்தல் வேண்டும்” என்று தெரிவிக்கின்றார். ஒப்பாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் என உலகியலில் மக்களிடையே வேற்றுமைகள் தோன்றி அவர்களிடையே இருத்தற்பாலதாகிய ஒருமை இன்பநிலையைச் சிதைத்து வாழ்க்கை இன்பத்தை நுகரவொண்ணாதபடி சிதைப்பதால் அவ்வவல நிலையைப் போக்குதல் வேண்டும் என்பாராய், “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும்” என்று உரைக்கின்றார். இந்நாளில் மக்களினத்தில் நிலவுகின்ற சாதி சமய வேற்றுமைகளை நோக்குகின்ற தலைவர்கள் இந்த ஒருமை நிலையையே வேண்டுவதை நாள்தோறும் செய்தித்தாள்களும், வானொலிகளும் உரைத்தவண்ணம் இருப்பது காணலாம். சாதி சமய பொருளாதார வேற்றுமையற்ற சமுதாயமே உலகியல் இன்ப வாழ்வுக்கு இன்றியமையாத தென்பதை வடலூர் வள்ளல் முன்னமே அறிந்துரைத்திருப்பதை இன்றைய உலகம் அறிதல் வேண்டும். அருட் பெருஞ் சோதி ஆண்டவனுடைய சிவானந்த ஞான வடிவம் எவ்வாற்றாலும் அழிவில்லதாகலின் அதனை விளக்குதற்கு, “எத்தாலும் அழியாத வடிவு” எனவும், ஆன்மாக்களும் அத்தன்மை எய்தி அதனோடு உடனிருந்து சிவபோகத்தை நுகர்வது அருள் நெறியின் பயன் என வற்புறுத்தற்கு, “நானும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டும்” என உரைத்தருளுகின்றார். (4)
|