4083.

     அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
          அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல் வேண்டும்
     வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
          மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
     புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
          பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
     உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
          ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

உரை:

     அருளரசனாகிய பெருமானே! நான் வேண்டுவனவற்றைத் திருச்சபையில் கேட்டு எனக்கு அருள் புரிய வேண்டுகின்றேன்; நான் அருட் பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானத்தைப் பெற்று இன்புற வேண்டும்: மலைகள் சூழ்ந்த நிலத்தில் உள்ள இவ்வுலகத்தவரும் நல்லொழுக்கம் உடையவர்களாதல் வேண்டும்; இறந்தவர்களை மறுபடியும் நான் உயிர் பெற்று வாழச் செய்தல் வேண்டும்; உலகின்கண் குற்றம் பொருந்திய கொலைச் செய்கையையும், புலால் உண்ணும் நெறியும் சிறிதளவும் மேற்கொள்ளாமல் எல்லா வுயிர்களும் மகிழ்வுடன் வாழ்தல் வேண்டும்; புகழ் பொருந்திய மெய்ம்மை சான்ற உனது அருள் ஞான வடிவில் எந்தையாகிய நீயும் எளியவனாகிய நானும் ஒன்றாய் இயைந்து நாளும் உயர்ந்தோங்க வேண்டுகிறேன். எ.று.

     திருவருள் நெறிக்குத் தலைவனாதலால் சிவபெருமானை, “அரைசே” எனப் புகழ்கின்றார். நிலவுலகைச் சுற்றி மலைகள் இருக்கின்றன என்பது புராண வழக்காதலின் நிலவுலகை, “வரை சேர் உலகு” என உரைக்கின்றார். உலகைச் சுற்றியுள்ள மலையை, “நேமி மால் வரை” என்று புராணங்கள் உரைக்கின்றன. மேன் மேலும் உயர்வு நல்குவதாகலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுவது பற்றி, “எவ்வுலகமும் ஓர் ஒழுக்க முறல் வேண்டும்” என்று வேண்டுகின்றார். புரை - குற்றம். உயிர்க்கொலை புரிவதும், புலால் உண்பதும் குற்றமாய் உயிர்கட்குத் துன்பம் விளைவிப்பது பற்றி, “புரை சேரும் கொலை நெறியும் புலைநெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்” என்று கூறுகின்றார். உயிர்களை வேட்டையாடிக் கொல்வதே தமக்குரிய தொழிலாகக் கொள்பவரும் உளராதலின் அவர்களது தொழில் இயலை, “கொலை நெறி” என்று குறிக்கின்றார். தாமும் இறுதியில் சிவமாம் தன்மை எய்தி இன்புற விழைகின்றாராதலின் வடலூர் வள்ளல், “ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே” என்று இயம்புகின்றார்.

     (5)