4084.

     அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
          அண்டம்எலாம் பிண்டம்எலாம் கண்டுகொளல் வேண்டும்
     துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
          சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
     படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
          படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
     ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
          ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

உரை:

     அடிகளாகிய பெருமானே! நான் வேண்டுவதைச் செவி சாய்த்துக் கேட்டு எனக்கு அருள் புரிய வேண்டும்; அண்டங்கள் பிண்டங்கள் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டு அவற்றின் இயல் நலங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும்; நுண்ணிய கால அளவிற்குட்பட்ட எவ்வகை உலகங்களிலும் வாழும் எவ்வகைத் தேவரும் எவ்வகை உயிர்களும் சுத்த சிவ நெறியாகிய சன்மார்க்கத்தைப் பெற்று ஒழுகுதல் வேண்டும்; நிவம் முதலாக வானம் ஈறாகவுள்ள எல்லாவற்றையும் படைத்தல், காத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் நான் செய்தற்கு அருள் புரிய வேண்டும்; அழிவில்லாத நின்னுடைய ஞானத் திருவுருவில் நானும் நீயும் ஒன்றாய் எப்பொழுதும் ஓங்குமாறு வேண்டுகிறேன். எ.று.

     அடிகள் - உயர்ந்தோரை அழைக்கும் சொல். அண்டம் - பெரியது. பிண்டம் - சிறியது. சிறியவும் பெரியவுமாகிய பொருள்களை அண்ட பிண்டம் எனபது நூல் வழக்கு. நாம் வாழும் நிலவுலகம் ஒரு அண்டம். அதன்கண் உள்ள ஒவ்வொரு அணுவும் பிண்டம் எனப்படும். காண்டற்கு அரியவையாதலின், “அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டு கொளல் வேண்டும்” என்று குறிக்கின்றார். துடி - நுண்ணிய கால அளவு. தத்துவாதீதமாகிய சிவமே மெய்ப் பொருளெனக் கொண்டு ஒழுகும் நெறி - சுத்த சிவ சன்மார்க்கமாகும் - சிவ சன்மார்க்கம் - சிவமாகிய மெய்ப்பொருள் நெறி. படி - நிலவுலகம். வான் - விண்ணுலகம். நிலம் முதலியவற்றைப் படைத்தல் காத்தல் முதலிய ஐந்து தொழிலும் சிவத்துக்கே உரிய செயலாயினும் அதனைச் சிவத் தன்மை எய்தித் தானும் செய்தல் வேண்டுமென விழைவாராய், “படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும்” என்று வேண்டுகின்றார். ஞானம் - படைத்தல் முதல் ஐந்தொழிலாவன : சிவஞானத்தை நல்குதல், அதனை மறவாமல் காத்தல் முதலிய ஐந்தொழிலுமாம். ஒடிதல் - அழிதல். நன்னெறிய சிவானந்த ஞானமே சிவத்தின் திருவடிவமாதலால் அதனை, “ஒடியாத திருவடிவு” என்று உரைக்கின்றார்.

     (6)