4085. அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆதி யமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
உரை: எனக்குத் தாயாகிய பெருமானே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளை நின்னுடைய திருச்செவியில் ஏற்று எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்; ஆணவம் முதலிய மலங்கள் மூன்றையும் நீக்கி நினது அருள் நெறியில் நிற்றல் வேண்டும்; இந்த மயக்கத்தைத் தரும் இயல்பினவாகிய தத்துவங்கள் எல்லாம் என் வசம் நின்று தத்தமக்குரிய செயல்களைச் செய்து ஒருவகைத் தீங்கையும் எனக்குச் செய்யாதனவாய் அமைதல் வேண்டும்; என்றன் பெருமானே! நான் வேண்டுதல் வேண்டாமை என்ற இரண்டும் இல்லாதவனாதல் வேண்டும்; ஒன்றாகிய நினது சிவபோக அனுபவம் எனக்கு உண்டாதலையும், தேவரீருடைய பெருமை பொருந்திய ஞானத் திருவுருவில் எந்தையாகிய நீயும் நானும் சேர்ந்து கலந்து ஓங்கும் உயர்ந்த தன்மையைப் பெறுதலும் வேண்டுகின்றேன். எ.று.
அம்மா என்பது தாயைக் குறிக்கும் முறைப் பெயர்ச் சொல். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும், “ஆணவம் ஆதிய” எனப்படுகின்றது. இவற்றின் தொடர்பால் ஆன்மாக்கள் பிறப்பிறப்புக்களை எய்தி வருந்துகின்றனவாதலால், “ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்” என விண்ணப்பிக்கின்றார். மால் - மயக்கம். மாலை - இயல்பு. மயக்கத்தைச் செய்கின்ற இயல்பினை யுடைய தத்துவங்கள் முப்பத்தாறையும், “இம்மாலைத் தத்துவங்கள்” என இயம்புகின்றார். ஆன்மாக்கள் இத்தத்துவங்களின் வழி நின்று பிறப்பிறப்புக்கேதுவாகிய நல்வினை தீவினைகளைச் செய்து துன்புறுதலின், “தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும்” என்று மொழிகின்றார். வேண்டுதல் வேண்டாமை என்ற இரண்டும் இன்பமும் துன்பமுமாகிய பயன்களை விளைவித்துப் பிறப்புக்கு ஏதுவாக்குதலால், “வேண்டுதல் வேண்டாமை யறல் வேண்டும்” என்றும், சிவ பரம்பொருள் ஒன்றேயாதலின் அதன்பால் பெறலாகும் இன்பம், “ஏக சிவபோகம்” என்றும், சிவபோகானந்தம் சிவானுபவமாதலால் அதன் இன்றியமையாமை விளங்க, “சிவபோக அனுபோகம் உறல் வேண்டும்” என்றும் எடுத்துரைக்கின்றார். அனுபோகம் - அனுபவம் எனவும் அனுபூதி எனவும் வழங்கும். மானம் - பெருமை. சிவனும் தானுமாய்க் கலவாவிடத்துச் சிவபோகம் இன்மையின், “திருவடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே” என்று முறையிடுகின்றார். (7)
|