4086. அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகள்எலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
உரை: எனக்குத் தந்தையாகிய பெருமானே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளை அன்புடன் ஏற்று அருள் செய்தல் வேண்டும்; நாதாந்தம் முதலிய அந்தங்கள் ஆறினுடைய நுட்பங்கள் எல்லாவற்றையும் யான் அறிந்து கைவரப் பெறுதல் வேண்டும்; உயிர்கட் கெல்லாம் யான் எல்லாத் துணையுமாகி நன்மையே செய்தல் வேண்டும்; என்னை அடுத்தவர்களுக் கெல்லாம் யான் இன்பம் செய்பவனாதல் வேண்டும்; இவ்வுலகில் நிலவும் சாதி, சமய வேறுபாடுகளினின்றும் நீங்கி எல்லா உலகத்தும் சமதர்மமாகிய சன்மார்க்கப் பொது நெறி நிலவுதல் வேண்டும்; எல்லாப் பொருட்களுக்கும் உயர்ந்ததாகிய ஆதி அந்தம் இல்லாத நின்னுடைய சிவஞான உருவில் யானும் உடையவனாகிய நீயும் கலந்து உயர்ந்து ஒளிரும் ஒருமை நிலையையும் பெற வேண்டுகின்றேன். எ.று.
தந்தையாகிய முறைமையைக் குறிக்கும் அச்சன் என்னும் முறைப் பெயர் “அச்சா” என விளி கொண்டது. ஆறந்தங்களாவன : நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்ற ஆறுமாம். நாதாந்தம் முதலிய ஆறும் அறிவாராய்ச்சி வடிவாய் ஆராய்வார் அமையும் நிலையாய் உள்ளவையாதலால், “ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்” என்று அறிவிக்கின்றார். உயிர்கள் பலவாகவும் அவற்றிற்கு வேண்டும் துணையும் எண்ணிறந்தனவாகவும் இருத்தலால், அவற்றிற்குக் குறைவறத் துணைபுரிந்து நலமே விளைவித்தல் வேண்டும் என்ற தமது பரந்த அருட் பண்பினை ஆர்வமுடன் விளக்குகின்றாராதலின், “எச்சார்புமாகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும்” என்றும், ஞான நலம் விளைந்து தன்பால் அடைந்த நன்மக்களுக்கு அந்நலமனைத்தும் தான் வழங்குதல்
வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால், “எனை அடுத்தார் தமக்கெல்லாம் இன்பு தரல் வேண்டும்” என்றும் இயம்புகின்றார். சாதி சமய விகற்பங்களால் மக்களினம் வேற்றுமை மிகுந்து போர்களுக்கும் பூசல்களுக்கும் இரையாகித் துன்பமுறுவது பற்றி, இவற்றின் தொடர்பு தம் உள்ளத்தில் எய்துதல் கூடாது என்னும் உணர்வு மிக்கவராதலின், “இச்சாதி சமய விகற்பங்கள் எல்லாம் தவிர்ந்து” எனவும், நிலவுலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சன்மார்க்கமாகிய சமதர்ம ஞானமும் ஒழுக்கமும் நிலை பெறுதல் வேண்டும் என்ற நன்னெறி ஓங்குதற்கு உதவுதல் வேண்டுமென விண்ணப்பிப்பாராய், “எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும்” எனவும் எடுத்துரைக்கின்றார். விகற்பம் - வேறுபாடு. வேற்றுமை எனினும் பொருந்தும். சாதி தோறும், சமயங்கள் தோறும் கொள்கைகளும் ஒழுக்கங்களும் வேறுபடுவதால் அவற்றை, “சாதி சமய விகற்பங்கள்” என்று விளம்புகின்றார். சன்மார்க்கப் பொது - சன்மார்க்கமாகிய சமதர்மப் பொது நெறி. உச்சம் - உச்சி எனவும் வழங்கும். உலகிலுள்ள உயிர்ப் பொருள், உயிரில் பொருள் ஆகிய எல்லாவற்றிற்கும் உச்சியில் விளங்குவது இறைவன் திருவுருவமாதலாலும், சிவ பரம்பொருளின் ஞான வடிவம் ஆதியும் அந்தமுமில்லாத அருள் ஞான வடிவமாதலாலும் அதனை, “உச்சாதி அந்தமிலாத் திருவடிவு” என்றும், அதன்கண் ஒன்றி யுடனாதலே உயிர்கள் பெறும் இன்பப் பேறாதலின், “திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே” என விண்ணப்பிக்கின்றார். (8)
|