4087. அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணம்எலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணம்எலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிரியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
உரை: அறிவுருவாகிய பெருமானே! நான் செய்து கொள்ளும் வேண்டுகோளைச் செவியேற்று அருள் புரிய வேண்டுகிறேன்; உலகில் படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் செய்து உனது திருவருள் ஞானத்தின் பெருமையை உலகவர் அறிய விளக்குதல் வேண்டும்; அடங்காது பரந்து விரிந்தோடும் கருவி கரணங்களெல்லாவற்றையும் அடக்கி ஆள்பவனாதல் வேண்டும்; சித்தாந்தம் வேதாந்தம் என்ற இரண்டிற்கும் பொதுவான ஞான ஒழுக்கம் எங்கும் சிறந்தோங்க வேண்டும்; யான் எண்ணுகின்றவற்றை எல்லாம் புறக்கணிக்காமல் இனிது எய்த அருள் புரிய வேண்டும்; எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தாந் தன்மையை எனக்குத் தந்தருள வேண்டும்; மேலும் நீயும் என்னோடு கலந்து என்னிற் பிரியாமல் இருத்தல் வேண்டும்; நானும் இடையறவின்றி நின்னையே அன்புடன் பாடி ஆடுதல் வேண்டும். எ.று.
சிவம் ஞானத் திருவுருவமாதலின், சிவனை “அறிவா” என அழைக்கின்றார். ஐந்தொழில்கள் : படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என இவை. படைத்தல் முதலிய ஐந்தொழிலுக்கும் சிவமே உரியதாயினும் படைக்கப்பட்ட உலகின்கண் இவை ஐந்தையும் தாம் புரியும் திறத்தை விரும்புகின்றாராதலால் வடலூர் வள்ளல், “ஐந்தொழில் நான் புரிந்துலகில் அருள் விளக்கல் வேண்டும்” என்று உரைக்கின்றார். படைத்தல் முதலிய ஐந்தும் இறைவன் திருவருட் செயலாதலின் அந்தப் பேரருளின் நலத்தை விளக்குமுகத்தால் தாம் ஐந்தொழில் செய்ய விரும்புகின்றமை புலப்பட, “அருள் விளக்கல் வேண்டும்” என மொழிகின்றார். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற கருவி ஐந்தும், மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்ற கரணம் நான்கும் பொது வகையில் கரணம் எனப்படுகின்றன. காணப்படும் பொருட்கள் எல்லாவற்றிலும் தானே பரந்து சென்று படர்வனவாதலால், “செறியாத கரணம்” என்று கூறுகின்றார். சித்தாந்த வேதாந்தங்கள் முடிவு நிலையில் வேறுபட்டுப் பிணங்குவனவாதலால், அப்பிணக்கு நீக்குதல் வேண்டி, “சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும்” என்று புகல்கின்றார். பொது - ஈண்டு நடுவு நிலை குறித்து நிற்கின்றது. எறிதில் - புறக்கணித்தல். எண்ணுவன எண்ணியாங்குப் பெற்றவிடத்துச் சிந்தையுள் தெளிவும் அமைதியும் தோன்றுவது பற்றி, “என் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்” என்று கூறுகின்றார். அனிமா மகிமா முதலிய அனைத்தும் செய்யக் கூடிய வன்மை யுளதாகிய வழி உலகம் தம் சொல்வழி நிற்கும் என்ற கருத்தால், “எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும்” என்று இசைக்கின்றார். பிரியாதிருந்தவிடத்து இன்பமும் மகிழ்ச்சியும் தோன்றி ஆடலும் பாடலுமாகிய செயல்களைப் புரிதற்கு ஊக்குதலால் அவற்றை, “பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனைப் பாடி ஆடுதல் வேண்டுவனே” என்று மொழிகின்றார். (9)
|