4088.

     அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
          அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
     மருளாய உலகம்எலாம் மருள்நீங்கி ஞான
          மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
     இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
          திடல்வேண்டும் எவ்வுயிரும்இன்படைதல் வேண்டும்
     பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
          புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

உரை:

     அருளுருவாகிய பெருமானே! யான் செய்கின்ற வேண்டுகோளைத் திருச்செவியில் ஏற்று எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்; என்னைக் கோபம் காமம் ஆகிய குற்றங்கள் அணுவளவும் வந்து பொருந்துதல் கூடாது; மருட்சி நிறைந்த எல்லா உலகங்களும் அம்மருட்சி நீங்கித் தெளிவுற்று அம்பலத்தின்கண் எழுந்தருளும் வள்ளலாகிய உன்னை வாழ்த்தி வழிபடல் வேண்டும்; அறியாமையாகிய இருள் வந்து என்னைப் பொருந்துதல் கூடாது; அன்பால் என்னை அடுத்தவர்கள் சுகம் பெறுதல் வேண்டும்; அவர்களோடு ஏனை எல்லா உயிர்களும் இன்பமடைய வேண்டும்; மெய்ப்பொருளாகிய உனது திருவுருவில் என்னை உடையவனாகிய நீயும் நானும் கூடிக் கலந்து ஒன்றி உயர்தலை வேண்டுகிறேன். எ.று.

     சிவபெருமானுக்கு அருளே திருமேனியாதல் பற்றி, “அருளா” என வுரைக்கின்றார். அருளன் என்பது அருளா என விளியேற்றது. கோபம், காமம் ஆகிய குற்றங்கள் சிறிது உண்டாயினும் அவற்றால் விளையும் தீங்கு பெரிதாதலால், “அணுத் துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்” என்று விண்ணப்பிக்கின்றார். மருள் என்பது திரிபுணர்ச்சி. பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்வது மருள் என்று சான்றோர் தெரிவிக்கின்றனர். “பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” (குறள்) என்று சான்றோர் கூறுவது காண்க. இத்திரிபுணர்ச்சி உலக மக்களிடையே நிறைந்திருத்தலின், “மருளாய உலகம்” எனவும், உலகியல் துன்பமயமாய் இருப்பதற்கே அஃது ஏதுவாதல் பற்றி, “உலகமெலாம் மருள் நீங்கி” எனவும், மருள் நீங்கியவிடத்து எங்கும் எவரிடத்தும் ஞானத் தெளிவு நிலையே நிலவுதலின் அவர்கள் ஞானசபையிடத்து விளங்கும் சிவத்தை யுணர்ந்து அதன் நலம் பெற்று வாயார வாழ்த்தி வழிபடுவராதலின், “ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்” எனவும் வேண்டுகின்றார். அறியாமை இருள் மயமாதலின் அது தம்மைப் பற்றிய வழிப் பலவகைக் குற்றங்கள் தோன்றித் துன்பம் விளைவிக்குமாதலின், “இருளாமை யுறல் வேண்டும்” என்று விண்ணப்பிக்கின்றார். அடுத்தவர் சுகம் பெறுதல் வேண்டும் என்பது பிறர் அதனை எய்தலாகாது என்று கருதுதற்கு இடந் தருதலின், அக்குற்றத்தை விலக்குதற்கு, அடுத்தவரை யன்றித் தம்மை அடையாமல் விலகி யிருப்பவரும் ஏனை உயிர்களும் இன்பம் பெறுதல் வேண்டும் என விண்ணப்பிப்பாராய், “எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்” என முறையிடுகின்றார். இறைவனது அருள் வடிவத்தினும் மெய்யாய பொருள் வேறில்லாமை விளங்க, “பொருளாம் ஓர் திருவடிவு” எனப் புகழ்கின்றார். பரம்பொருளோடு கலந்து ஒன்றி இன்புறுதலே முத்திப் பேறாதலால், “உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும்” என்று புகல்கின்றார்.

     (10)