4089.

     அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
          ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
     எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
          எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
     கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
          காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
     விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
          விமலாநீ யுங்கலந்தே விளங்குதல் வேண்டுவனே.

உரை:

     தூய வடிவினனாகிய சிவபெருமானே! நான் செய்து கொள்ளும் விண்ணப்பத்தைச் செவி குளிர ஏற்று அருள் புரிய வேண்டுகிறேன்; அம்பலத்தில் ஆடுகின்ற உனது சிவந்த திருவடிகளை நான் பாடிப்பரவ வேண்டும்; எமன் முதலியவர்களால் உண்டாகும் சாக்காடு என்னும் தடை எனக்கு உண்டாதல் கூடாது; எல்லாவற்றையும் இனிது செய்து முடிக்கக்கூடிய திறமையை எனக்கு நல்க வேண்டுகிறேன்; பொறுமை முதலிய நற்பண்புகள் பொருந்தி உயிர்கள் யாவும் சன்மார்க்கத்தை விரும்பி யேற்று நின்னுடைய திரு விளங்கும் அம்பலத்தை மகிழ்ச்சியுடன் துதிக்க வேண்டும்; விமலம் முதலிய உயர் குணங்களையுடைய உனது திருவருள் ஞான வடிவில் யானும் விமலனாகிய நீயும் கலந்து ஒன்றி விளங்குதலை வேண்டுகிறேன். எ.று.

     அமலம், விமலம் என்பன மலமின்மையைக் குறிக்கும் சொற்கள். இயல்பாகவே மலக் கலப்பில்லாதவனாதலால் சிவனை, “அமலன்” என்றும், “விமலன்” என்றும் அறிஞர் புகழ்ந்துரைப்பர். அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானாதலின் சிவனுடைய திருவடிகளை, “ஆடி நிற்கும் சேவடி” எனவும், அதனைப் பாடிப் பரவுவது உயிர்கட்கு உறுதிப் பொருளாதல் பற்றி, “சேவடியைப் பாடி நிற்க வேண்டும்” எனவும் பகர்கின்றார். உயிர்களுக்குச் சாக்காட்டை விளைவிப்பவனாதலால், அச்சாக்காட்டையே எமன் எனக் குறித்துச் சாவாப் பெருநிலையை எய்துதல் வேண்டும் என்னும் தமது விழைவு புலப்பட, “எமனாதித்தடை என்றும் எய்தாமை வேண்டும்” என்று இயம்புகின்றார். சாக்காடு இன்னாததாதலின் அதனை வேண்டா என விலக்குகின்றார். எல்லாம் செய்ய வல்ல ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே உளதாயினும் அவன் அருளைப் பெறுவார்க்கு அத்திறமை இனிது எய்துதலால், “எல்லாம் செய் வல்ல திறன் எனக்களித்தல் வேண்டும்” என்று உரைக்கின்றார். கமை - பொறுமை. அடக்கம் முதலிய நற்பண்புகளை, “கமையாதி” எனக் குறிக்கின்றார். இந்த நற்பண்புகள் சன்மார்க்கத்திற்கு இன்றியமையாவாதலின், “கமையாதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்து” எனவும், காதல் அளவாய் நில்லாது இறைவன் எழுந்தருளி ஆடும் ஞான அம்பலத்தை நினைந்து வணங்கித் துதித்தல் வேண்டும் என்பாராய், “திருப்பொதுவைக் களித்து ஏத்தல் வேண்டும்” எனவும் இசைக்கின்றார். விமலாதி, தூய்மை முதலிய உயர்ந்த குண நலன்களின் திருவுருவமே பரம் பொருளாதலின் அதன் ஞானத் திருவுருவை “விமலாதி உடைய ஒரு திருவடிவு” எனவும், அதனை ஒன்றி உடனாய் நின்று சிவபோகம் பெறுவதே உயிர் வாழ்வின் முடிபொருளாதலால், “ஒரு திருவடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே” என வேண்டிக் கொள்ளுகின்றார்.

     (11)