4091. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
உரை: கோடை வெயிலில் வெதும்பினார்க்கு இளைப்பாற்றிக் கொள்ளுமாறு எதிர்ப்பட்ட தழைத்துக் குளிர்ந்த மரம் போல்பவனே! அம்மரம் அவர்க்குத் தருகின்ற தண்ணிய நிழல் போல்பவனே! அந்நிழலினிடத்தே மரத்தில் நன்கு பழுத்த கனி போல்பவனே! அம்மரச் சூழலிடையே அமைந்த நீரோடையில் சுரக்கின்ற இனிய
சுவை பொருந்திய தண்ணீர் போல்பவனே! விரும்பத்தக்க அத்தண்ணீரில் மலர்ந்து தோன்றும் நறுமணம் கமழும் மலர் போல்பவனே! ஓடை யருகே உள்ள மேடையில் வீசுகின்ற மென்மையான பூங்காற்றுப் போல்பவனே! அந்த மென்மையான காற்றினால் தேகத்தில் உண்டாகின்ற இந்தச் சுகம் போல்பவனே! சுகானுபவத்தில் பிறக்கும் இன்பப் பயனாகியவனே! விளையாடும் பருவத்தே என்னை மணந்துகொண்ட மணவாளனே! அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே! என்னுடைய சொன் மாலையை ஏற்று மகிழ்ந்தருளுக. எ.று.
வெயில் மிகுந்து தாக்கும் வேனிற் காலத்தைக் கோடை என்று குறிக்கின்றார். கோடை வெயிலில் இயங்குவார்க்கு வேண்டப்படுவதெல்லாம் குளிர்ந்த மர நிழலாதலால் அது கிடைத்த வழி அவர்க்கு உளதாகும் இன்பம் பெரிதாதலின் அதனைச் சிவானுபவமாகக் கருதி, “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே” என்று கூறுகின்றார். இருள்படத் தழைத்த மரத்தின் நிழல் குளிர்ச்சி உடையதாகலின் அச்சிறப்பு விளங்க, “குளிர் தருவே” என்று குறிக்கின்றார். குளிர் நிழலை அடைந்து இளைப்பாறினார்க்கு அம்மரத்தில் நன்கு கனிந்த சுவை மிக்க கனியின்பால் வேட்கை செல்லுமாதலின் அதனைப் புலப்படுத்தற்கு, “தரு நிழலே நிழல் கனிந்த கனியே” என்றும், சுவைமிக்க கனிந்த நற்கனி என்பது தெரிவித்தற்கு, 'கனிந்த கனியே' என்றும் இயம்புகின்றார். ஓடை - நீர்நிலை. இளைப்பாறிக் கனி உண்டு மகிழ்வார்க்கு நீர்ப் பருகும் வேட்கை அடுத்துத் தோன்றுதலின் அந்நிலையில் நீரோடை இளநீர் போலும் இன்சுவை பொருந்திய நீர் உடையதாயின் அவர்க்கு உளதாகும் மிக்க இன்பத்தை உய்த்துணர்விப்பாராய், “ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே” எனச் செப்புகின்றார். அந்த இனிய நீர்நிலையில் நறுமணம் கமழும் மலர் தோன்றிக் கண்ணுக்கினிய இன்பம் தருமாயின், அதனைக் காணும் இன்பத்தோ டமையாது படித்து மணம் நுகரப் பெறும் வேட்கை தணிய அம்மலர் விளங்குமாயின் அது பெரியதோர் இன்பத்தைத் தருமாதலால் அவ்வின்பம் சிவானந்தமாதல் விளங்க, “உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே” என்று சொல்லுகின்றார். தண்ணிய நிழல் பெற்று இளைப்பாறிக் கனிந்த கனி கொண்டு ஓடையில் சுவை மிக்க தண்ணீரைப் பருகி நறுமலரின் மணம் நுகர்ந்து மகிழ்பவர்க்கு நடந்து போந்தத் தளர்ச்சி நீங்க மெல்லிய பூங்காற்று வீசும் மேடையில் கிடந்து ஓய்வு பெறுதற்கு உள்ளம் செல்லுமாதலின் அக்கருத்துப் புலப்பட, “மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே” எனவும், ஓய்வு பெறும் உடம்பிற்கு மெல்லிய காற்று இன்பம் பயக்கும் இனிய சுகமாய் உள்ளத்திற்குச் சிவபோகமாகிய அனுபவத்தை நல்குதலால் அதனை, “மென் காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே” எனவும் விளம்புகின்றார். ஆடுதல் - ஆடை யென வந்தது. அஃது விளையாடும் பருவத்தின் மேற்று - மிக்க இளம் பருவத்தேயே தமக்குச் சிவநேசம் உண்டாகினமை தெரிவித்தற்கு, “ஆடையிலே எனை மணந்த மணவாளா” என்று தெரிவிக்கின்றார். பொது - அம்பலம். (2)
|