4092.

     இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
          ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
     அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
          அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
     என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
          இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
     துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
          தூயதிரு அடிகளுக்கென் சொல்லும் அணிந் தருளே.

உரை:

     தளர்ச்சி யுற்று வருந்தும் காலத்து இன்பம் எய்துமாறு பெறப்பட்ட பெரிய செல்வம் போல்பவனே! துணையின்றி வருந்திய பொழுது நான் வருந்தாவண்ணம் என்னைத் தாங்கி யருளிய நல்ல துணைவனே! என்னுட் கலந்து நின்பால் எனக்கு அன்பு மீதூற நின்று இனிமை செய்யும் அமுதம் போல்பவனே! என்னை அலைக்கின்ற அச்சமெலாம்போக்கி என்னை ஆட்கொண்டருளிய ஞானாசிரியனே! என்னுடைய மனப் பக்குவத்தை எண்ணாமல் என்னை மணந்துகொண்ட தலைவனே! நான் விரும்பியபடி எல்லாம் எனக்கு அருள் புரிந்த தலைவனே! மெய்யன்புடைய பெருமக்களுக்கு உண்டாகும் துன்பங்களைப் போக்குதற் பொருட்டு அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! உன்னுடைய தூய திருவடிகளில் என்னுடைய இந்தச் சொன் மாலையை அணிந்தருளுக. எ.று.

     எய்ப்பு - தளர்ச்சி. வறுமையாலும் நோய் வகைகளாலும் உளதாகும் தளர்ச்சி. அக்காலத்தே மனத்தின்கண் துன்பமே நிலவுவதால் அது வேண்டிய செல்வத்தால் அல்லது நீங்காமையும், “எய்ப்பிடத்தே நான் இன்புற பெற்ற பெருவைப்பே” என்று கூறுகின்றார். வைப்பு - வைத்த செல்வம். துன்பத்தைப் போக்கி இன்பம் பெறுவித்தலின் அதனை, “பெருவைப்பு” என்று சிறப்பிக்கின்றார். துன்பக் காலத்தில் அது நீக்கும் துணைவரில்லாதபோது மனத்தின்கண் கையறவு தோன்றி வருத்துதலின், அந்நிலையில் தோன்றாத் துணையாய் நின்று துன்பம் துடைக்கும் பெருமானாதல் பற்றிச் சிவனை, “ஏங்கிய போது என்றன்னைத் தாங்கிய நல்துணையே” என்று சொல்லுகின்றார். நல்துணை, காலமும் இடமும் அறிந்து உற்ற துணையை ஒழியாது செய்து உயிர்க்குயிராய் நின்று அறிவு நல்கி இன்பம் செய்தலின் இறைவனை, “அன்புற என்னுட் கலந்தே அண்ணிக்கும் அமுதே” என்று அறிவிக்கின்றார். அண்ணித்தல் - இனித்தல். “எண்ணித் தம்மை நினைந்திருந்தேனுக்கு அண்ணித்திட்டமுதூறும் என் நாவுக்கே” (திருவெண்ணி) என்று பெரியோர் வழங்குவது காண்க. அறிவறியாமையால் உளதாகும் அச்சத்தை ஞான உரைகளால் போக்கி யருளுவது பற்றி, “அச்சமெலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே” என்று உரைக்கின்றார். இளமைப் பருவத்திலேயே இறைவன்பால் தமக்கு அயரா அன்பும் ஆர்வமும் உண்டானமை விளங்க, “என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே” என்று இசைக்கின்றார். விரும்பியன விரும்பியவாறு இறை யருளால் தமக்கு எய்தினமை விளங்க, “இச்சை யுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே” என்றும், மெய்யன்பர்களின் துன்பங்களைப் போக்குதற் பொருட்டே சிவபெருமான் அம்பலத்தில் ஆடுகின்றான் என்ற கருத்து இனிது தோன்ற, “துன்பற மெய்யன்பருக்கே பொது நடஞ் செய் அரசே” என்றும், பெருமானுடைய திருவடிகளை நற்றாள் எனச் சான்றோர் குறித்தலால், “தூய திருவடி” என்றும் துதிக்கின்றார்.

     (3)