4093.

     ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
          உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
     பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
          பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
     நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
          நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
     கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
          களித்தெனது சொன்மாலை கழலில் அணிந் தருளே.

உரை:

     தளர்ந்த கொடி போன்ற எனக்குக் கிடைத்த பெருத்த பற்றுக் கோடாக விளங்குபவனே! என் உள்ளம் மயங்கும் பொழுது மயக்கத்தைப் போக்கித் தெளிவு நல்கும் பரம்பொருளே! பசித்த பொழுது எதிர்பாரா வகையில் கிடைத்த பால் பெய்து பிசைந்த சோற்றுத் திரள் போன்றவனே! அச்சத்தால் நான் அஞ்சிய பொழுதெல்லாம் என்னுடைய அச்சத்தை நீக்கி யருளிய பெருமானே! இறந்தவரை உயிர் பெற்றெழ அருள் நல்குகின்ற பெரிய தெய்வாமிருதம் போல்பவனே! நான் கலந்து கொள்ளுமாறு நானாகி என்னை அடைந்த மெய்ப்பொருளாகிய சிவமே! உருகிய மனத்தை யுடைய அன்பர்கள் கண்டு தொழுமாறு அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! திருவுள்ளம் உவந்து என் சொன் மாலையைத் திருவடியில் அணிந்தருள்வாயாக. எ.று.

     ஒசிந்த என்பது ஒசித்த என வலித்தது. கொழு கொம்பின்றி அலைகின்ற கொடி என்றற்கு, “ஒசித்த கொடி” என வுரைக்கின்றார். உலகில் சிறந்த பற்றுக்கோ டின்றி அலமுருகின்ற எனக்கு மெய்ம்மை அமைந்த ஞானப் பற்றுக் கோடாய் விளங்குவது புலப்படச் சிவனை, “எனக்குக் கிடைத்த பெரும் பற்றே” என இசைக்கின்றார். பற்று - பற்றுக்கோடு. வன்மையும் நிலைபேறும் உடைமை தோன்ற, “பெரும் பற்று” என்று புகல்கின்றார். முக்குண வயத்தால் மனம் தெளிவின்றி மயங்கும்போது தெளிவருளும் சிறந்த ஞானமாய்த் திகழ்வது பற்றிப் பரசிவத்தை, “உள் மயங்கும்போது மயக்கு ஒழித்தருளும் தெளிவே” என வுரைக்கின்றார். பசி மிக்க பொழுது உண்பொருளென யாது கிடைப்பினும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் பாற் சோறு கிடைத்தது போலவும், அச்ச மிகுதியால் செய்வதறியாது மனம் கலங்கும் நிலையில் தோன்றி அச்சத்தைப் போக்குகின்ற தலைவன் போலவும் அருள் புரிவது பற்றிச் சிவபெருமானை, “பால் சோற்றுத் திரளே” என்றும், “என் பயம் தவிர்த்த துரையே” என்றும், பாராட்டுகின்றார். செத்தாரை எழுப்பும் தேவாமிருதம் போன்ற திருவருள் நல்கிய சிறப்பு விளங்க, “நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மாமருந்தே” என்றும், சிவயோகம் பெறுமிடத்து ஆன்மாவும் சிவமாந் தன்மை பெறுவதால், “நான் புணர நானாகி நண்ணிய மெய்ச் சிவமே” என்றும் நவில்கின்றார். “சிவனைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” (பொன்வன்) என்று சான்றோர் கூறுவது காண்க. மெய்யன்பர் உள்ளம் மெழுகு போல் இளகிய மென்மை உடைத்தாதலால் அவர்கள் இனிது கண்டு பரவும் வண்ணம் அம்பலத்தில் சிவபெருமான் ஆடல் புரிவது விளங்க, “கசித்த மனத்தன்பர் தொழப் பொது நடஞ்செய் அரசே” என்று சொல்லுகின்றார். கசிந்த மனம் என்பது எதுகை நோக்கி மனம் என வந்தது. தமது சிறுமை புலப்படுத்தற்கு வடலூர் வள்ளல், “எனது சொன்மாலை கழலில் அணிந்தருளே” என்று வேண்டுகின்றார். கழல் - திருவடி.

     (4)