4094. மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
வாட்டம்எலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
உரை: மனம் சோர்ந்து வாடியபொழுது என் எதிரே தோன்றி என் வாட்டமெலாம் நீக்கி எனக்கு அருள் வாழ்வு நல்கிய அருட் செல்வமே; சினம் பொருந்திய முகத்தை யுடையவர்களைப் பார்த்து நான் அறிவு மயங்கியபோது அவர்களைச் சிரித்த முகமுடையவர்களாக்கி என்னை மகிழ்வித்த சிவபெருமானே! அன்னப் பறவையை ஊர்தியாகக் கொண்டு செலுத்துபவனாகிய பிரமன், திருமால் முதலியோர் துருவிச் சென்று காணா தொழிந்தாராக, எளியனாகிய எனக்குத் தன்னுடைய திருவடியையும் திருமுடியையும் நான் காணக் காட்டி என்னை அடிமை கொண்ட சிவபதியே! அடியார் இனமெனக் கருதி வரும் மெய்யன்பர்கள் தொழுமாறு அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! என்னுடைய சொன்மாலை யாவையும் ஏற்று அணிந்தருள வேண்டும். எ.று.
உலகியலில் துன்பங்களால் மனம் சோர்ந்து வாடிய காலத்தும் என் எதிரே தோன்றி என் வாட்டத்தைப் போக்கி நான் ஊக்கமுடன் வாழ்வாங்கு வாழுதற்கு வழிவகையும் ஆற்றலும் நல்கிய அருட் செல்வமாகியவன் சிவபெருமான் என்ற கருத்து விளங்க, “மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டமெலாம் தவிர்த்து எனக்கு வாழ்வளித்த நிதியே” என்று கூறுகின்றார். நிதி இல்வழி வாழ்வு வளமாகாது என்பது பற்றி, “வாழ்வளித்த நிதியே” என்று குறிக்கின்றார். சினம் கொண்ட முகத்தாரைக் காணுமிடத்துத் தீங்கு செய்வரோ என்றெழும் எண்ணத்தால் அறிவு திகைப்புறுதலால், அவரைக் காணா தொழியாமை நோக்கி அவர்களது சினத்தைத் தணித்து மனத்தைக் குளிர்வித்து உவகையால் அதனை நிறைவித்து என்பால் நகுமுகம் உடையவராய் ஒழுகுவித்த அருள் நலம் தோன்ற, “சின முகத்தார் தமைக் கண்டு திகைத்தபொழுது அவரைச் சிரித்த முகத்தவராக்கி எனக்களித்த சிவமே” என்று செப்புகின்றார். அனம் உகைத்தான் - அன்னப் பறவையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடையவனாதலால் பிரமதேவனை, “அனம் உகைத்தான்” என்று தெரிவிக்கின்றார். பிரமனும், திருமாலும் சிவனுடைய திருமுடியும் திருவடியும் காண்டற் பொருட்டு அன்னமாகவும் பன்றியாகவும் உருக்கொண்டு முறையே மேனோக்கியும் கீழ்நோக்கியும் சென்று முயன்றும் காண மாட்டாராயின வரலாறு புலப்பட, “அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க” எனவும், அவர்கள் காண மாட்டா தொழிந்த திருவடிகளையும் திருமுடிகளையும் தாம் கண்டு பரவுமாறு காட்டி யருளி அதுவே பற்றுக்கோடாகத் தாம் இறைவனுக்கு அடிமையாகிய திறம் தோன்ற, “எனக்கே அடிமுடிகள் காட்டுவித்தே அடிமை கொண்ட பதியே” எனவும் புகழ்கின்றார். காட்டிய என்னும் செய்வினைப் பொருளில் காட்டுவித்து என்பது வந்துளது. மெய்யன்பர்கள் தம்மிற் கூடி நின்று தொழுதற்குக் காரணம் அனைவரும் அன்பரினம் என்ற உணர்வாதலால் அவர்களை, “இனம் எனப் பேரன்பர் தொழ” என்று இயம்புகின்றார். தாம் பாடுகின்ற சொன் மாலைகள் அனைத்தும் சிவனுக்கே உரியவையாதல் புலப்பட, “என்னுடைய சொன் மாலை யாவும் அணிந்தருளே” என்று இசைக்கின்றார். (5)
|