4095.

     கங்குலிலே வருந்தியஎன் வருத்தம்எலாம் தவிர்த்தே
          காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
     செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
          சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
     எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
          என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
     துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
          சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

உரை:

     இரவுப் பொழுதில் பலவற்றை நினைந்து வருந்திய என் வருத்தங்கள் எல்லாம் போக்கிக் காலைப் பொழுதில் என் மனத்தின்கண் மகிழ்ச்சியைத் தோற்றுவித்த பெருமானே! செங்குவளை மாலையும் மல்லிகைப் பூமாலையும் சேர அணிந்து என்னை மணந்து கொண்ட தெய்வ மணவாளனே! எங்கும் ஒளி மயமாய் நிற்கின்ற நினது நிலைமையை அடியேன் காணக் காட்டி என்னுடைய உள்ளும் புறமும் நிறைந்து விளங்குகின்ற மெய்ப் பொருளாகிய சிவனே! உயர்வு பொருந்த அழகிய அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்ற அருளரசே! நான் சொல்லுகின்ற சொன் மாலையை நின்னுடைய தோளில் அணிந்து கொண்டு எனக்கு அருள் செய்க. எ.று.

     உடம்பில் உளவாகும் நோய்கள் இராக் காலத்தில் மிக்குத் தோன்றி வருத்துவதும், காலைப் பொழுதில் அவற்றின் வருத்தங்கள் மறைந்து விடுவதும் இயல்பாதலால், “கங்குலிலே வருத்திய என் வருத்த மெலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெருங் களிப்பே” என்று கூறுகின்றார். களிப்பு - உவகை. களிப்புத் தருகின்ற சிவபெருமானை, “களிப்பே” என மொழிகின்றார். உவகையும் வருத்தமும் உள்ளத்து உணர்வு வகைகளாதலால், “என் உளத்தே” எனக் குறித்துரைக்கின்றார். குவளை மாலையையும் மல்லிகை மாலையையும் சேர்த்து எனக்கு அணிந்து மகிழ்ந்தாயாதலின் என்னுடைய சொன் மாலையை நீ உனது தோளில் அணிந்தருளுவாயாக என வேண்டுகின்றார். ஞான ஒளியுருவினதாதலால் அவ்வுருவைத் தான் கண்ட திறம் விளங்க, “எங்கும் ஒளி மயமாகி நின்ற நிலை காட்டி” எனவும், அவ்வொளியைத் தம்முடைய சிந்திக்கும் மனத்தினும் புறத்தே காண்கின்ற கண்ணினும் தம்மைக் காணச் செய்தமை புலப்படுத்தற்கு, “என் அகத்தும் புறத்தும் நிறைந்திலங்கிய மெய்ப்பொருளே” எனவும் இயம்புகின்றார். துங்கம் - உயர்வு.

     (6)