4096.

     கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
          கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
     விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅருள் அமுதே
          மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
     திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
          திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
     வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
          மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.

உரை:

     பெய்யப்பட்ட நாவின்கண் ஊறும் நீரால் கரைந்தொழியாது நாவிடத்தேயே நின்று மிக்க பெரும் இனிப்பைத் தருகின்ற கற்கண்டு போல்பவனே! உள்ளக் கனிவோடு என்பால் விரைந்து வந்து என் துன்ப மெல்லாவற்றையும் துடைத் தருளிய அருளுறவாகிய அமுதமே! மெய்ம்மையான அருட் செல்வமே! மெய்ப்பொருளாய் விளங்குகின்ற ஞான விளக்காகியவனே! தோல் சுருங்கிய எனது உடல் விரைவில் பொன்னிற உடம்பாய் ஒளிர்ந்து, ஒளிர்வதின்றி ஓங்குமாறு அருள் புரிந்த சித்துப் பொருளாகிய மெய்ம்மை சான்ற சத்துப் பொருளே! பலருள்ளும் என்னை வரைந்து கொண்டு ஞான மணம் புரிந்து கொண்ட அம்பலத்தில் ஆடும் அருளரசே! மிக்க மகிழ்வோடு நான் தொடுக்கின்ற இச்சொன் மாலையை அணிந்தருளுக. எ.று.

     நாவின்கண் வைத்த கற்கண்டு வாயில் ஊறும் நீரால் விரைந்து கரைந்து போவது போலின்றி நாவிடத்தேயே நிலைபெற நின்று மிக்க இனிப்புச் சுவையைத் தருகின்றமை விளங்கச் சிவனை, “கரைந்து விடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே” என்றும், அருட் பெருக்கால் உள்ளம் கனிந்து நொடிப் பொழுதும் தாமதமின்றித் தம்பால் வந்து துன்பத்தைப் போக்கி ஞான இன்பத்தை நல்கியது பற்றிச், சிவபெருமானை, “கனிவாய் விரைந்து வந்து என் துன்பமெல்லாம் தவிர்த்த அருளமுதே” என்றும் வடலூர் வள்ளல் போற்றுகின்றார். தாக்குகின்ற துன்பத்தைத் தாங்க மாட்டாத என் மென்மை கருதி விரைந்து போந்தமை பற்றி, “கனிவாய் விரைந்து வந்து” என்று கட்டுரைக்கின்றார். கனிவு - அருள் மிகுதியால் இரங்குகின்ற மனநிலை. அருவப் பொருளாயினும் நின் திருவருள் சிவன் வடிவில் காணத் தோன்றுவது பற்றி, “மெய்யருளே” என்று புகழ்கின்றார். பொய்ப் பொருளுமாகாது புனைந்துரையுமாகாது மெய்ம்மையாகத் தோன்றி ஞான ஒளி நல்குவது பற்றிச் சிவபெருமானை, “மெய்யாக விளங்குகின்ற விளக்கே” என்று புகல்கின்றார். திரைந்த உடல் என்பது தோல் சுருங்கிய உடம்பு. திருவருள் ஞானம் கைவரப் பெற்றார்க்கு மேனி பொன்னிற மடைதல் பற்றி, “திரைந்த உடல் விரைந்து உடனே பொன்னிற உடம்பே யாகி” என்றும், அவ்வுடம்பு தானும் பொன்னிற ஒளி கொண்டு அழிவின்றித் திருவருள் ஞானமாய் ஓங்குதலால், “பொன் னுடம்பே ஆகித் திகழ்வது அழியா” என்றும், அது திருவருள் ஞான உருவாகிய சித்துப் பொருளாகவும் எக்காலத்தும் அழிவில்லாத ஞான மெய்ப்பொருளாதலின், “அருள் சித்தே மெய்ச்சத்தே” என்றும் சிறப்பிக்கின்றார். உலகில் அன்பர்கள் பலர் இருக்கத் தமக்கு எய்திய திருவருள் நலத்தை வியந்துரைப்பாராய், “வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடஞ்செய் அரசே” எனக் கூறுகின்றார்.

     (7)