4097.

     கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
          கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
     விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
          மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
     மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
          மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
     துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
          சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

உரை:

     மேல் கதி செல்வதற்கு வேண்டும் நன்னெறியைக் காட்டுகின்ற கண் போன்றவனே! என் கண்ணில் கலந்திருக்கின்ற கருமணியாகவும், மணியில் கலந்து ஒளிர்கின்ற ஒளியாகவும் இருப்பவனே! படைக்கப்படுகின்ற உலகுகளில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராய் விளங்குகின்ற சிவ பரம்பொருளே! மெய்ப்பொருள் உணர்ந்த ஞானிகளிடத்தே அகங்கையில் வைத்த நல்ல இனிய கனி போல்பவனே! அறிவு எல்லைக்கு அப்பாலாய் விளங்குகின்ற தனிப் பெரும் ஞான நிலையமே! வேதாகமங்களின் உச்சியில் விளங்கும் இன்பம் நிறைந்த பரம்பொருளே! ஆடித் துதிக்கும் அன்பர்கள் தொழுது நிற்க அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! நான் சூட்டுகின்ற சொன்மாலையைத் தோளில் அணிந்தருளுக. எ.று.

     மேற்கதி பெற முயல்வார்க்கு நெறி காட்டுவது ஞானக் கண்ணாதலின் அதனை, “கதிக்கு வழி காட்டுகின்ற கண்” என்றும், கண்ணாகிய ஞானமே சிவனுக்கு வடிவமாதலின், “கண்ணே” என்றும் கூறுகின்றார். உலகியற் பொருளைக் காட்டுவது ஊனக் கண்ணாதலின் அதனைச் சிறப்பிக்கும் கருமணியே, “என் கண்ணில் கலந்த மணி” என்றும், மணியே பொருள்களைக் காண்பதற்கு ஒளி கொண்டு விளங்குவதால், “மணியில் கலந்த கதிரொளி” என்றும் உரைக்கின்றார். கண்ணுக்குச் சிறப்புத் தருவது கருமணியும், மணிக்குச் சிறப்பளிப்பது அதனுட் கலந்திருக்கும் ஒளியாதலின் மூன்றையும் சேரக் கூறுகின்றார். விதித்தல் - படைத்தல். உயிர்கள் வாழ்தற்பொருட்டு உலகுகள் படைக்கப்படுதலின், “விதிக்கும் உலகு” என விதந்துரைக்கின்றார். உயிர்க்குயிராய் நின்று ஞானம் பெறுவித்தலின், “உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே” என விளம்புகின்றார். மெய்யுணர்ந்தோர் - ஞானிகள். அவர்கட்கு ஐயம் திரிபின்றாகத் தெளிய விளங்குதலின் பரம்பொருளை, “மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீங்கனி” என இயம்புகின்றார். கையகத்தே விளங்கிய தீங்கனி - அங்கையில் நெல்லிக்கனி என்பது வழக்கு. மதிக்கும் மதி - அறியும் அறிவு. இயற்கையும் செயற்கையுமாகிய உயிரறிவு எல்லைக்கு அப்பால் மெய்ஞ்ஞான நிலையமாய் மேம்படுவது பற்றிச் சிவத்தை, “மதிக்கு மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனிநிலை” என்று தெரிவிக்கின்றார். மறைமுடிபை வேதாந்தம் என்றும், ஆகம முடிபைச் சித்தாந்தம் என்றும், இரண்டாலும் உண்மை யுணர்வார்க்கு இன்பமயமாய் விளங்குதலின் சிவ பரம்பொருளை, “மறைமுடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே” என்று இசைக்கின்றார். சிவானந்தம் குறைவற நிறைந்த இயல்பினதாதலின் “இன்ப நிறைவே” என எடுத்து மொழிகின்றார். அம்பலத்தின்கண் இறைவனது ஆடலைக் காணுகின்ற மெய்யன்பர்கள் கைகளைக் குவித்து வாயாரத் துதித்துத் தொழுதலின், “துதிக்கும் அன்பர் தொழப் பொதுவில் நடம் புரியும் அரசே” என்று சொல்லுகின்றார்.

     (8)