4098.

     அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
          அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
     கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
          காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
     விண்டகுபேர் அருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
          விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
     தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
          தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.

உரை:

     அண்டங்கள் எவ்வளவோ அத்தனையும், அவற்றிலுள்ள சராசரங்கள் எத்தனையோ அத்தனையும் தோற்றுவித்த பெரும் பொருளாய், அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அகத்தும், புறத்தும், அகப்புறத்தும், புறப்புறத்தும் விளக்கமுற நின்று மேலுள்ள உலகங்களுக் கெல்லாம் மேலாய் ஒளிரும் அருட் சோதிப் பெருவெளியாகிய ஞானவெளியின் நடுவே யிருந்து ஒப்பற்ற பெரிய கருணையாகிய கொடியை உயர்த்தித் திருவருளாகிய குளிர்ந்த ஒப்பற்ற செங்கோல் நடத்தி அம்பலத்தில் நடிக்கின்ற ஒப்பற்ற அருளரசே! அடியேனுடைய சொன் மாலையை நின்னுடைய திருவடியில் அணிந்தருளுக. எ.று.

     அண்டங்கள் எண்ணிறந்தனவாதலால் அவை யெல்லாம் அடங்க, “அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும்” என்றும், அண்டங்கள்தோறும் சரம் அசரம் என்னும் இருவகைப்பட்ட பொருள்கள் எவ்வளவோ அவ்வளவும் தோற்றுவிக்கும் பரம்பொருளாதலால் அதனை, “அவ்வளவும் கண்டதுவாய்” என்றும் குறிக்கின்றார். சரம் - இயங்குதிணை. அசரம் - நிலைத் திணை என வழங்கும். ஒவ்வொன்றுக்கும் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என நால்வகைச் சூழ்நிலை உண்மையின் அந்நிலைகளிலும் சிவம் நிலவுதல் பற்றி, “அகத்தும் காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க” என்று உரைக்கின்றார். இவ்வண்ட சராசரங்களின் நால்வகைச் சூழ்நிலைக்கும் அப்பால் விளங்குவது சிவபோகப் பெருவெளியாதலால் அதனை, “விண்டகு பேரருட் சோதிப் பெருவெளி” என விளக்குகின்றார். பெருவெளியில் நிலவுவது திருவருள் ஞான ஒளியாதல் பற்றி, “அருட் சோதிப் பெருவெளி” எனச் சிறப்பிக்கின்றார். இப்பெரிய சிவஞானப் பெருவெளியில் நடுவே நிறுத்தப்பட்ட கொடி நலத்தை, “பெருங் கருணைக் கொடி” என்று புகழ்கின்றார். அக் கொடியை உயர்த்தி அருட் செங்கோல் நடாத்தும் அருமை விளங்க, “பெருங் கருணைக் கொடி நாட்டி” என்றும், அக்கொடி நிழலில் இருந்து அருளரசு புரிவது பற்றிச் சிவ பெருமானை, “அருளாம் தண்டகும் ஓர் தனிச் செங்கோல்” நடத்துகிறார் என உரைக்கின்றார். அண்ட வெளிக்கெல்லாம் அப்புறத்ததாய் அருட்சோதிப் பெருவெளிக்கு நடுவினதாய்ப் பெருங் கருணைக் கொடி நாட்டி அருளரசு புரியும் சிவமே மன்றில் திருக்கூத்தாடுகின்றது என்றற்கு, “தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனியரசு” என்று போற்றுகின்றார்.

     (9)