4099.

     நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
          நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
     வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
          வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
     இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
          இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
     எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
          என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.

உரை:

     யோக நூல் வல்லவர்கள் சொல்லுகின்ற யோகாந்தத்தில் பல கோடித் தலங்கள் உள்ளன; உண்டென நாட்டப்பட்டு உரைக்கும் போதாந்தத்தில் பல கோடிப் பதிகள் உள்ளன; கலை வல்லுநர்கள் கண்ட கலாந்தத்தில் பல கோடிப் பதிகள் உள்ளன; இவ்வாறே சொல்லப்படும் நாதாந்தத்தில் பல கோடிப் பதிகள் உள்ளன; இல்லங்களில் ஓதப்படும் வேதாந்த நூல்களில் பல கோடிப் பதிகள் உள்ளன; விளங்குகின்ற சித்தாந்த நூல்களில் பல கோடிப் பதிகள் கூறப்படுகின்றன; இவை யெல்லாவற்றிலும் அருட் சோதியாகிய தனியாட்சி நடத்துகின்ற அருளரசே என்னுடைய சொன் மாலையை இன்பத்துடன் ஏற்றருளுக. எ.று.

     யோகாந்தம், போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என வரும் அந்தங்கள் ஆறனுள்ளும் எண்ணிறந்த பதிகள் உரைக்கப்படுகின்றன. பதிகள் - ஈண்டு உலகுகள் மேற்று. இப்பதிகள்தோறும் எண்ணிறந்த சராசரங்கள் வாழுகின்றன. இவற்றுக் கெல்லாம் அருள் ஞானம் வழங்கி அரசு புரிகின்றான் சிவபெருமான் என்ற கருத்து விளங்க, “எல்லாம் பேரருட் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் என் அரசே” என்று இசைக்கின்றார். யோக நூல்களைப் பயின்று செயல்வகை சிறப்புற்ற பெரியோர்களை நல்லார் என்று கூறுகின்றார். போதாந்தம் என்பது புனைந்துரை யன்று பொருளுடை என அறிஞர்களால் நாட்டப்பட்டமை புலப்பட, “நாட்டியதோர் போதாந்தம்” என்று நவில்கின்றார். ஆகமங்களில் நுணுக்கமாய்க் காட்டப்படுவதாகலின் கலாந்த நிலையை, “வல்லார் சொல் கலாந்தம்” என வழங்குகின்றார். வேத நூல்கள் உலகியல் வாழ்க்கைக்குரிய அறங்களை உரைப்பனவாதலால் அவற்றை, “இல்லார்ந்த வேதாந்தம்” எனவும், சித்தாந்த நூல்களில் ஆங்காங்கு விளக்கப்படுவது பற்றி, “இலங்குகின்ற சித்தாந்தம்” எனவும் சிறப்பிக்கின்றார்.

     (10)