4100. நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஞானசக்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
உரை: சுத்த பராசத்தி அண்டம் முதல் ஞான சத்தி அண்டம் ஈறாகக் கற்பித்துச் சொல்லப்படுகின்ற அண்டங்களாகிய இவற்றுள் அடங்கிய பற்பல சத்தி, சத்திமான்களின் அண்டப் பகுதிகள் எத்தனையோ கோடி உள்ளன; அவை யனைத்தும் தன் திருவடிக் கீழ் அடங்கி விளக்கமுறவும், தலையில் அணிந்த பொன்முடி விளங்கச் சமரசமாகிய மெய்ம்மை சான்ற ஞான நெறியாகிய சுத்த சிவசன்மார்க்கம் காட்டுகின்ற பெருமை பொருந்திய நிலையில் இருந்து எங்கணும் பரந்த அருட் சோதியை யுடைய செங்கோலைச் செலுத்தும் நீதி சான்ற நடம் புரிகின்ற அருளரசாகிய பெருமானே! எளியேன் தொடுத்தணியும் சொன்மாலையை ஏற்றருளுக. எ.று.
பராசத்தி அண்டம் முதல் ஞான சத்தி அண்டம் ஈறாக வுள்ள அண்டங்கள் அத்தனையும் அவற்றை உள்ளடக்கிய பலவாகிய அண்டங்களையும், நூலறிவும் நுண்ணறிவும் ஒருங்கு பெற்ற சான்றோர்களால் மனத்தால் கண்டு நாட்டப் பட்டவையாதலின் அவற்றை, “நாட்டியதோர் அண்டம்” என நவில்கின்றார். முதலும் ஈறுமாகிய அண்டங்களுக் கிடையே எண்ணிறந்த அண்டங்கள் இருப்பது புலப்பட, “அண்டப் பகுதி எத்தனையோ கோடிகள்” எனவும், அவை சத்திகளுக்குரியவுமாய், அச்சத்திகளை யுடைய சத்திமான்களுக் குரியவுமாய்ச் சத்தி சத்தர்களும் எண்ணிறந்தனராய் இருத்தலின் அவற்றை, “ஈட்டிய பற்பல சத்தி அண்டப் பகுதி” எனவும் குறிக்கின்றார். இவ்வண்டப் பகுதிகள் அனைத்திற்கும் மேலாய்ப் பரசிவம் விளங்குவதால் அவற்றை, “தன் குடை நிழற் கீழ் விளங்க” என்று இயம்புகின்றார். அண்டப் பகுதிகள் எல்லாவற்றிற்கும் மேலாய்ப் பொன்முடி அணிந்து பரசிவம் வீற்றிருப்பது விளங்க, “சூட்டிய பொன்முடி இலங்க” என்று சொல்லுகின்றார். அண்டத்திற் கெல்லாம் அதீதமாய் ஒளி யுற்று விளங்கும் பரம்பொருளின் உண்மைப் பாங்கினை, “அண்டமா இருளூடு கடந்து உம்பர் உண்டு போலும் ஓர் ஒண்சுடர் அச்சுடர் கண்டிங் காரறிவார் அறிவாரெலாம் வெண்டிங்கக்கண்ணி வேறு என் என்பரே” (சித்தத்) என்று நாவுக்கரசர் உரைப்பது காண்க. சிவ சன்மார்க்கம் என்பது தூய உண்மை ஞான நெறியாதலால் அதனை இன்னார்க்கு உரியதன்று எனப் பேதிக்கப் படாமல் உரிய ரல்லாதார் பிறரில்லை என்று நிலவும் இயல்பிற்றென்பது விளங்க, “சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவசன்மார்க்கம்” என்று சிறப்பிக்கின்றார். அண்டாதீதப் பெருநிலையில் பரசிவம் வீற்றிருக்கும் உயர்நிலை இதுவாம் என்றற்கு, பெருநிலை என்று குறிப்பிட்டு அதன்கண் இருந்து தனது திருவருள் ஞான ஒளியினை அண்டங்களனைத்திலும் பரப்பி வீற்றிருந்து அருள் புரிந்தொழுகும் தன்மையை விளக்குதற்கு, “பெருநிலையில் அமர்ந்தே நீட்டிய பேரருட் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் நீதி நடத்தரசே” என்று புகழ்கின்றார். அருட் பெருஞ் சோதி பரவாத இடம் யாண்டும் இல்லாமை விளக்குதற்கு, “நீட்டியதோர் அருட்சோதி” எனவும், நீதியே தனக்கு உருவாக அமைந்து திருக்கூத்தாடுவது பற்றிச் சிவனை, “நீதி நடத்தரசே” எனவும் சொல்லிப் பரவுகின்றார். “நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்ததவன்” (வைகா) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. (11)
|