4101.

     தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
          தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
     நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
          நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
     அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
          அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
     என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
          யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.

உரை:

     தன்னுடைய பெருமை இத்துணையது எனத் தானே அறியாத தன்மையை யுடையவனும், என்னுடைய தனித் தலைவனும், என் உயிர்க்குள் இருந்து இனிமை மிக்க ஒப்பற்ற சுவையாகிய சிவபெருமானே! நின்னுடைய பெருமையை நான் அறிய மாட்டேனாக, அறியாதவர்களுள் நான் ஒருவன்தான் அறியாதவன் என எண்ணற்க, நானேயன்றித் திருமால், பிரமன் முதலாகிய மூர்த்திகளும் அறிகிலர்; நின்பால் அன்பு உண்டு பண்ணும் ஆகமங்களும் வேதங்களும் அறியமாட்டா வென்றாலும் அம்மூர்த்திகளும் அந்த நூல்களும் சில சொல்மாலைகளை அணிதலால் என்னுடைய பக்குவம் அறியாமல் ஆண்டு கொண்ட அருளரசனாகிய நினக்கு யானும் அம்மூர்த்திகளைப் போலவும், ஆகமாதி நூல்களைப் போலவும் சொன் மாலை அணிகின்றேனாதலால் நீ என்னை ஏற்றருளுக. எ.று.

     “தம் பெருமை தானறியாத் தன்மையன்” (சாழல்) என்று சான்றோர் கூறுதலால் வடலூர் வள்ளலும், “தன் பெருமை தானறியாத் தன்மையன்” என்று சிவனைக் கூறுகின்றார். தனித் தலைவன் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தலைவன். உயிர்க்குள் உயிராய் இருந்து உணர்வுக்குப் புத்தின்பம் நல்குதலால், “என்னுயிர்க்குள் இனித்த தனிச் சுவையே” என்று இயம்புகின்றார். சுட்டியிருந்து எல்லாவற்றையும் எஞ்சாமல் முழுதும் அறியும் முதல்வனை நோக்கச் சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய மக்களுயிரால் அறிதற் கரிதலால், “நின் பெருமை நானறியேன்” எனவும், அறியாமைக்குரிய சிறுமை தன்னிடத்தேயன்றித் தேவ தேவர்கள்பாலும், அவர்கள் விரும்பி ஓதிப் பரவும் வேதாகமங்களின்பாலும் உளது என வெளிப்படுத்தற்கு, “நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் அன்புறும் ஆகம மறைகள் அறியாவே” எனவும் இயம்புகின்றார். ஆகமாதி நூல்கள் பயில்வோர் உள்ளத்தில் இறைவன்பால் அன்பு தோற்றுவிப்பதில் தலைசிறந்தனவாதலின், “அன்புறும் ஆகம மறைகள்” என உரைக்கின்றார். மிக்க இளம் பருவத்தே தமக்குச் சிவனிடத்தே ஆறாக்காதல் உண்டாகினமை தெரிவிப்பாராய் வடலூர் வள்ளல், “என்பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே” எனக் குறிக்கின்றார். மூர்த்திகளாகிய தேவர்களும் அவர் பயின்று ஓதும் ஆகமங்களும் வேதங்களும் சிவனை முழுதறிந்து மொழியும் முதுக்குறை யுடையன அல்லவாயினும், நின் புகழை எடுத்து மொழிதலின் நானும் இச்சொன் மாலையை அணிகின்றேன்; ஏற்றருள் என்பது கருத்து.

     (12)