4102. உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணியஎன் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி
இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
உரை: உள்ளுந்தோறும் தெவிட்டுதல் இல்லாமல் தித்தித்து என் உடம்பிலும் உயிருணர்விலும் பன்முறையும் கலத்து என் உள்ளும் புறமும் நின்னுடைய குளிர்ந்த அருள்வண்ணம் பரவுமாறு பொங்கி நிறைந்து மேலே வடிந்து என்மயமனைத்தும் தன்மயமாக்கி எண்ணிய என் எண்ணமெல்லாம் எண்ணியவாறு எனக்கு உண்டாகுமாறு ஒளி நல்கி விளங்குகின்ற பெருமை பொருந்திய திருவருளாகிய இனிய அமுதத் திரளாகியவனே! நான் செய்த புண்ணியமே! எனக்கு அமைந்த பெரிய பொருளே! என்னுடைய அருளரசே! என் மொழிகளைப் புன்மொழி என்று புறக்கணிக்காமல் ஏற்று இன்புற்றருளுக. எ.று.
தெவிட்டுதல் - வேண்டா என விலக்கும் நிலை உண்டாதல். உண்ணுந்தோறும் உண்ணுந்தோறும் மேலும் உண்டற்கே விழைவு தோற்றுவிப்பது பற்றி, “உண்ணவுண்ணத் தெவிட்டாதே தித்தித்து” என்றும், உடம்புள்ளும் உயிருணர்விலும் மாறி மாறிக் கலந்து கொண்டமை பற்றி, “உடம்போடு உயிருணர்வும் கலந்து கலந்து” என்றும், உடம்பின் உள்ளும் புறத்தும் குளிர்ந்த அருள்வண்ணம் பரவும்படி உள்ளுக்குள்ளே பொங்கி நிறைந்து வழிந்தமை தோன்ற, “உள்ளகத்தும் புறத்தும் தண்ணியவண்ணம் பரவப் பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி” என்றும், இங்ஙனம் பொங்கி நிறைந்து ததும்பிய அருளமுதம் உடம்பையும் உயிரையும் சிவமயமாக்கிய தன்மை புலப்பட, “என்றன் மயமெல்லாம் தன்மயமே யாக்கி” என்றும், அதனால் தாம் பெற்ற பயன் இதுவென உரைப்பாராய், “எண்ணிய என் எண்ணமெல்லாம் எய்த” என்றும் இயம்புகின்றார். இதனால் தமக்கு விழைந்த நலத்தை, “ஒளி வழங்கி” என்று கூறுகின்றார். இங்ஙனம் ஞான வொளி நல்கிய அருள் நலத்தை, “இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதே” என ஓதுகின்றார். புண்ணியம் - புண்ணியத்தின் விழைவு. பெரிய பொருள் - பிரமப் பொருள் என உபநிடதங்களால் உரைக்கப்படுவது. புன்மொழி - இனிய பொருளில்லாத வெறுமைச் சொல். இறைவனுடைய திருவருளாகிய அமுதம் உடம்பிலும் உயிருணர்விலும் கலந்து நிறைந்து தமது சீவத் தன்மையைப் போக்கிச் சிவத் தன்மையை நல்கிற்று என்பது கருத்து. (13)
|