4103.

     நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
          நடுஇருக்க என்றனையே நாட்டியபேர் இறைவா
     பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
          பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
     கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
          கோவேஎன் கணவாஎன் குரவாஎன் குணவா
     நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
          நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.

உரை:

     நாட்டு மக்கள் கண்டு என்னைச் சூழவிருந்து நன்கு மதிக்கும்படியாக மணிகள் இழைத்த மேடையின் நடுவே உயர்ந்திருக்குமாறு என்னை உயர்த்தி அருளிய இறைவனே! பாடுகின்ற புலவர்கள் பாடுந்தோறும் அவர்களுக்கு நல்ல பரிசுகளை நல்கும் தலைவனே! ஓதுகின்ற வேதங்களின் பாட்டாக இருப்பவனே! மெய்ம்மை சான்ற பாட்டுக்களால் எய்தும் இன்பப் பயனாக இருப்பவனே! அன்பர் கூட்டத்தை ஆள்பவனே! சிவகாமக் கொடியாகிய உமாதேவிக்குப் பொருந்திய கணவனே! எங்கள் கோவே! எனக்குக் கண் போன்றவனே! என்னைப் பெற்றவனே! எனக்கு இனிய குணங்களை யுடையவனே! நெடிய கல்வி வல்ல சான்றோர் புகழ்ந்து துதிக்க மணி யிழைத்த அம்பலத்திலே நடித்தருளும் அருளும் நிதியும் உடைய அரசனே! எனது நெடிய இப் பாட்டை ஏற்றுக் கொண்டருளுக. எ.று.

     நாட்டில் சிறப்புடன் வாழ்கின்ற பெருமக்களை நாட்டார்கள் என்று கூறுகின்றார். கல்வி அறிவால் உயர்ந்தமை விளங்க, “நாட்டார்கள் மதித்திட மேடையிலே நடுவிருக்க நாட்டிய பேர் இறைவா” என்று நவில்கின்றார். மேடையிலே நடுவிருத்தலாவது உயர்ந்தோர் அவையில் முந்தி யிருத்தல். பண் சுமந்த பாடல்களைப் பாடுவோர்க்குப் பரிசளித்து ஊக்கும் பரமன் என்பது பற்றி, “பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே” என்றும், வேத மந்திரங்களாகிய பாட்டும், பாட்டின் பொருளும், அவற்றால் விளையும் பயனும் பரம்பொருளின் உரு வென்பது பற்றி, “பன்னுமறைப் பாட்டே மெய்ப் பாட்டினது பயனே” என்றும் பாடுகின்றார். வேத மந்திரப் பாட்டுக்களை யன்றிப் பிற சான்றோர் மெய்ம்மை ஞானத்தால் பாடுகின்ற பாட்டும் அவனையே பொருளாகக் கொண்டவையாதல் பற்றி, “மெய்ப் பாட்டினது பயனே” என்று சிறப்பிக்கின்றார். மெய்யன்பர்கள் தம்பால் அன்போடு கூடி யிருந்து பரவுகின்ற கூட்டத்தில் சிறப்புடைய மெய்ம்மைப் பொருளாக விளங்குபவனாதலால், “கூட்டாளா” எனக் கூறுகின்றார். உமாதேவிக்கு மனமுவந்த கணவராதலின், “சிவகாமக் கொடிக்கு இசைந்த கொழுநா” எனவும், எல்லா உலகுயிர்களுக்கும் அருள் வழங்கும் வேந்தனாதல் தோன்ற, “கோவே” எனவும் பரவுகின்றார். கணவன் - கண் போன்றவன். தாயும் தந்தையுமாதல் பற்றி, “என் குரவா” எனக் குறிக்கின்றார். நற்குணங்கள் எல்லாம் திரண்ட திருவுருவினன் என்பது பற்றி, “குரவா” எனப் புகழ்கின்றார். கல்வி, அறிவு ஒழுக்கங்களால் நீண்ட புகழ் படைத்த பெரியோர்களை, “நீட்டாளன்” என்பர். சான்றோர்களும் முனிவர்களும் இவ்வகையில் அடங்குவது பற்றி அவர் அனைவரையும் இவ்வாறு தொகுத்துரைக்கின்றார். இறைவனது நீண்ட புகழை எடுத்தோதுவது பற்றி அவன் புகழ்பாடும் பாட்டுக்களை, “நெடு மொழி” என்று உரைக்கின்றார். நாட்டிய நூலின் விதி முறைப்படி அம்பலத்தில் ஆடுவது பற்றிச் சிவனை, “நீதி நடத்து அரசே” என்று பாராட்டுகின்றார். நீதியே உருவாகக் கொண்டு ஆடுபவன் என்பது பற்றி இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும்.

     (14)