4104. கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
உரை: கையால் பற்றுதற் கமைந்த உயர் பொருளும், என் கருத்துக்கு இசைந்த மென்மையுறக் கனிந்த கனிவுப் பொருளும், கண்களும், கண்களின் காட்சிக்கு இசைந்த இனிய கணவனும், உடம்பில் அணிந்து கொள்ளற்கு இனிய அணியுமாய், அழகிய மேடையில் என்னுடனே மெய் தோயக் கலந்த பொழுதில் உண்டாகின்ற சுகமாகியவனே! நெய் கலந்த உணவும், நன்னெறிக்கண் அமைந்த நெறி வகையும், நித்தியப் பொருளும், எல்லாமாய் விளங்கும் சத்தியப் பொருளும், உலகின்கண் பொய்ந்நெறி உடையார்க்குக் காணப் படாமல் அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமானே! என்னுடைய சொற்களைப் பொருளில்லாத வெறுமை மொழி என்று புறக்கணிக்காமல் ஏற்று அணிந்து கொள்வாயாக. எ.று.
வன்மையும் மென்மையுமாகிய உலகியற் பொருட்களில் பற்றி இன்புறுதற் கமைந்த பொருள் போல் பற்றும் பொருளாய்ப் பற்றிய விடத்து இன்பம் தருவதாய் விளங்குவது பற்றி, “கைக்கிசைந்த பொருளே” எனவும், நினைவார்க்கு இனியாம் என்பது பற்றி, “கருத்திசைந்த கனிவே” எனவும் கூறுகின்றார். கனிவு உடையதைக் கனிவு என்பது உபசாரம். கண் போற் சிறந்தும், காட்சிக்கு இசைந்தும் விளங்குவது பற்றி, “கண்ணே என் கண்களுக்கு இசைந்த கணவா” என்று போற்றுகின்றார். வடலூர் அடிகளின் உள்ளம் சிவன்பால் உளதாகிய அன்பால் குழைந்து பெண்மைத் தன்மை எய்துகின்றது தோன்ற, “கண்களுக்கே கலந்திசைந்த கணவா” என வுரைக்கின்றார். கண்நிறைந்த கணவன் என்ற சொல் வழக்கை ஒட்டி நிற்பது, கண்ணிற் கலந்து காட்சிக்கு இனிமை பொருந்த இலங்குகின்றது என்பது கருத்து. உடம்பில் அணியும் அணி வகைகளும் உடம்பின் நிறத்துக்கும் உருவியல்புக்கும் ஒத்தமைதல் இன்றியமையாதல் பற்றி, “மெய்க்கு இசைந்த அணியே” என விளம்புகின்றார். மெய்யும் மெய்யும் பொருந்தக் கூடுமிடத்தில் உண்டாகும் இன்பக் குவிப்பை, “பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெருஞ் சுகமே” என்று பேசுகின்றார். இனித் திருவருள் முயக்க இன்பம் சுற்றி நின்றது. உணவுக் கிசைந்த நெய் என்னாது நெய்க்கு இசைந்த உணவு என மாறி மொழிந்தது பெய்யப்படும் நெய்யின் மேம்பாடு விளங்க நிற்கின்றது. செல்லும் நெறியும் அந்நெறி நின்றாருடைய சிறப்பால் மேம்படுதலின், “நெறிக்கு இசைந்த நிலையே” என்று சிறப்பிக்கின்றார். எங்கும் எல்லாப் பொருட்கும் ஒத்த இயல்பினது என்றற்கு, “எல்லாமாம் சத்தியமே” எனப் புகழ்கின்றார். நுண்ணுணர்வுடைய சான்றோர்க்கே காண்டற் கரிதாகிய அம்பல நடனம் பொய் யறிவுடையோர்க்குக் காட்சி அரிதாம் என்பது பற்றி, “உலகில் பொய்க்கு இசைந்தார் காணாதே பொது நடஞ்செய் அரசே” என்று புகல்கின்றார். (15)
|