4105. கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை
வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பேர் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
உரை: பிறர்க்குக் கொடுத்தாலும் தனக்கென எடுத்தாலும் குறைதலில்லாத அருட் செல்வமே! உயிர்க் கொலை செய்யாத அருள் நெறித் தலைவனே! சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்ல பதிப் பொருளே! உண்டாலும் அடுத்தடுத்து உண்பதற்கே ஆசை உண்டாக்குவதன்றி வெறுப்புணர்வு உண்டாகாத வகையில் நிறைகின்ற அமுதமே! எத்தனை முறை எடுத்தெடுத்துச் சொன்னாலும் சொல்லி முடியாத பரவொளிப் பொருளே! என்னுடைய உயிராய் என்னுயிர்க்கென அமைந்த பெரிய துணைவனே! தடுத்து நிறுத்த வல்லவர்களே இல்லாத ஒப்பற்ற பெரிய அருளரசே! குற்றங்களால் தாழ்வு பட்ட சொன்மாலை என்று இகழாமல் ஏற்று மகிழ்ந்தருள்க. எ.று.
கொடுக்க எடுக்கக் குறையும் இயல்புடையது உலகியற் செல்வமாதலால் அதனை விலக்குதற்கு, “கொடுத்திடநான் எடுத்திடக் குறையாத நிதியே” என்று கூறுகின்றார். எல்லா நல்லறங்களுக்கும் தலையாயதாதலின் கொல்லா நெறியையே சிவமாகக் கருதி, “கொல்லா நெறியே” என்றும், எல்லாம் வல்ல பரம்பொருளாதல் தோன்ற, “சித்தெல்லாம் செய் பதியே” என்றும் தெரிவிக்கின்றார். உண்ணுந் தொறும் உண்ணுந்தொறும் உணர்வின்கண் ஆறா வேட்கையை மிகுவிப்பது பற்றி, “மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை வைப்பதன்றி வெறுப்பறியா வண்ண நிறையமுதே” என்று மொழிகின்றார். மடுத்தல் - உண்டல். உள்ளத்துணர்வாய் அளவிறந்த ஆசையை மிகுவிப்பது “உள்ளாசை வைப்பது” என்று குறிக்கப்படுகின்றது. தெவிட்டாத நிலையை வெறுப்பறியாவண்ணம் என விளம்புகின்றார். சொற்கு எட்டாப் பொருள் என்றும் சொற் றெறியாப் பொருள் என்றும் சான்றோர் புகழ்தலின், “எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே” என உரைக்கின்றார். இறைவன் செய்கின்ற அருட் செயல்களைத் தடுத்து நிறுத்த வல்லவர் வேறு ஒருவரும் இல்லாமை விளங்க, “தடுத்திட வல்லவர் இல்லாத் தனிமுதற் பேரரசே என்று சொல்லுகின்றார். குற்றமிகுதியால் தாழ்ச்சி யுடைய சொற்கள் தாழ் மொழி எனப்படும். குற்றமுடைய சொற்களால் ஆகியது இந்தச் சொல் மாலை என வெறுத்தொதுக்கலாகாது என்றற்கு, “தாழ் மொழி என்று இகழாதே தரித்தருளுக” என வேண்டுகின்றார். (16)
|