4106.

     தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
          சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
     தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தேங்கின்
          தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
     இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
          எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
     அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
          அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந்தருளே.

உரை:

     மா பலா வாழை ஆகிய மூவகைக் கனிகளையும் தனித் தனியாகப் பிழிந்து வடிகட்டி ஒன்றாய்க் கூட்டி அதன்கண் சர்க்கரையும் கற்கண்டின் தூளும் சிறிதளவு மிகுப்படக் கலந்து அக் கலவையின்கண் தூய மணம் கமழும் தேனைச் சொரிந்து பின்னர்ப் பசுவின் பாலையும், தேங்காயிலிருந்து எடுத்துப் பிழிந்து கொண்ட தனிப் பாலையும் ஒன்றாய்ச் சேர்த்து ஒரு பிடி அளவான பாசிப் பருப்பின் பொடியையும் கலந்து இனிய சுவையும் மணமும் உடைய நெய்யைப் பெய்து அடுப்பேற்றி இளஞ் சூட்டில் இறக்கி எடுத்த இன்சுவைக் கட்டியினும் இனிக்கின்ற தெளிந்த அமுது போல்பவனே! என்றும் நிலைபெறத் திருச்சிற்றம்பலத்தில் செய்கின்ற விளக்க மிக்க நடனத்தை உடைய அருளரசே! உன் திருவடிக்கு அணியாக எனது சொன் மாலையை அணிந்தருளுக. எ.று.

     முக்கனி, மா பலா வாழை ஆகிய மூவகைக் கனிகள். வாழையின் மிகக் கனிந்த பழத்தில் நெய் ஊறுவது பற்றித் தனித்தனியே விழியச் சொல்லுகின்றார். மாம்பழத்தைப் பிழிந்த வழிக் கோதுகள் கலத்தலின் வடித்தல் வேண்டிற்று. சர்க்கரை அளவினும் கற்கண்டின் பொடி சிறிது மிகைப்பட இருக்க வேண்டுமென்பதற்காக, “மிகக் கலந்து” என மொழிகின்றார். கோற்றேன் - கொம்புத் தேன் என வகை பல உண்மையின் எவ்வகையதாயினும் ஒரு வகையே கொள்ளல் வேண்டும் என்றற்கு, “தனித்த நறுந்தேன்” என்றும், தேங்காயைத் துருவிப் பிழிந்தெடுத்த தனிப் பாலைக் குறிப்பதற்கு, “தேங்கின் தனிப் பால்” என்றும் கூறுகின்றார். பாசிப் பருப்பின் தோலை நீக்கி உள்ளுறு பருப்பினை அரைத்தெடுத்த மா எனற்கு, “ஒரு தீம் பருப்பிடி” என உரைக்கின்றார். தீம் பருப்பு என்பதனால் பாசிப் பருப்பு கொள்ளப்பட்டது. ஒரு என்பதைப் பிரித்துப் பிடியொடு கூட்டி 'ஒருபிடி' என அளவு கூறுவோரும் உண்டு. சூடு சிறிது மிக்க வழிச் சுவை கெட்டு விடும் என்பதுபற்றி, “இளஞ் சூட்டில் இறக்கி” என இயம்புகின்றார். அருளமுதம் இன்சுவைக் கட்டியினும் சிறந்தது எனப் புலப்படுத்தற்கு, “சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுது” என மொழிகின்றார். அனித்தம் - நிலையாமை. திருச்சிற்றம்பலம் - திருப் பொது எனப்படுகிறது. அலங்கல் - மாலை.

     (17)