4107. மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
உரை: ஐயுறுதற் கில்லாத பெரிய ஒளியை யுடைய வைர மணிகளாலாகிய பெரிய மலையையும், மாணிக்க மணியாலாகிய மலையும், பசுமை நிறமுடைய மரகதக் கல்லாலாகிய பெரிய மலையும், விலை மதிக்க வொண்ணாத உயர்ந்த தூயதாகிய பெரிய முத்துத் திரளும் போல்பவனே! தேவர்களும் நெருங்குதற்கரிய ஒப்பற்ற மெய்ப்பொருட் பயனே! கொலை புலை முதலிய செயல்களில்லாத நற்குணத்தை யுடைய பெரியோர்களோடு கூடி உறவாடும் பெருமானே! அருட் செங்கோலைச் செலுத்துகின்ற ஒப்பற்ற தலைவனே! மெய்யுணர்வால் உண்மை நிலையை அறிந்துகொண்ட ஞானிகள் போற்றுகின்ற அழகிய அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்ற அரசே! உன்னுடைய திருவடிகளாலாகிய அழகிய தாமரைகளுக்கு உனது பெரிய சொல் மாலையை அணிந்தருளுக. எ.று.
மலை வறியாப் பெருஞ் சோதி, நன்றோ தீதோ என ஐயுறுதற்கிடமின்றி மிக்க ஒளியை யுடைய வைரமணி போல்பவனே என்றற்கு, “மலை வறியாப் பெருஞ் சோதி வச்சிர மாமலையே” என்றும், சிவந்த ஒளியைப் பரப்பும் மாணிக்க மலை போல் விளங்குவது பற்றி, “மாணிக்க மணிப் பொருப்பே” என்றும், மரகத மணி போல் பசுமையான ஒளியைப் பரப்பும் பெரிய மலை போல் விளங்குவது தோன்ற, “மரகதப் பேர் வரையே” என்றும், மேனி எங்கும் வெண்ணீறு அணிந்து வெண்மையான ஒளி திகழ விளங்குதல் பற்றி, “ஆணிப் பெருமுத்துத் திரளே” என்றும் போற்றுகின்றார். விலை மதிக்கப் பெறும் உலகியல் முத்துக்களின் வேறுபடுத்தற்கு, “விலை யறியா ஆணிப் பெருமுத்துத் திரளே” எனப் புகழ்கின்றார். ஆணி - முத்து. ஆணிப் பொன் என்பது போல வந்தது. ஆணி - திண்மையும் தூய்மையும் சுற்றி நின்றது. மக்களின் உயர்ந்த ஞானச் சிறப்புடைய தேவர்களும் உணர்தற் கரிய மெய்ப்பொருளால் விளையும் பேரின்பப் பொருள் என்றற்கு, “விண்ணவரும் நண்ணரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே” என விளம்புகின்றார். கொலையும், புலால் உண்டலும் இல்லாத உயர்ந்த குணமுடைய அருளார் கூட்டத்தில் எழுந்தருளி அவர் உறவை நயந்து இன்பம் செய்தலால், “கொலை யறியாக் குணத்தோர்தம் கூட்டுறவே” எனவும், அருளே திருவுருவாய் நின்று எவ்வுயிர்பாலும் அருளறமே நிலவ இயலுதல் பற்றி, “அருட் செங்கோல் நடத்துகின்ற தனிக் கோவே” எனவும் போற்றுகின்றார். உண்மை யறிவால் சிவத்தின் செம்மை நிலையை அறிந்து அஃது அருள் ஞான வுருக் கொண்டு அம்பலத்தில் ஆடல் புரிவது அறிந்து மெய்ஞ்ஞானிகள் துதிக்கும் இயல்பை விளக்குகின்றாராதலின், “மெய்யறிவால் நிலை அறிந்தோர் போற்று மணி மன்றில் நடத்தரசே” என்று போற்றுகின்றார். (18)
|