4108.

     கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
          கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
     பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
          பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
     மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
          வல்லிஎன மறைகள்எலாம் வாழ்த்துகின்ற வாமப்
     பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
          பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.

உரை:

     கண் களிக்குமாறு புகை சிறிதுமின்றி இரு புருவங்கட்கு இடையிலுள்ள இலாடத்தானத்தின் நடுவே தோன்றித் திகழ்கின்ற கற்பூர விளக்கம் போல்பவனே! இசை இன்பம் பெருகப் பாடுகின்ற பாட்டிடத்தே தோன்றுகின்ற இன்பமாகியவனே! மெய்யன்பர் உள்ளத்தில் இனிமை மிகுமாறு பழுத்துவிளங்கும் ஞானப் பழம் போல்பவனே! மண்ணவரும் விண்ணவரும் கண்டு மகிழுமாறு திருமணம் செய்து கொள்ளப்பட்டவள் சிவகாமவல்லி என்று வேதங்கள் எல்லாம் போற்றி வாழ்த்துகின்ற இடப்பால் மடந்தையாகிய உமாதேவி கண்டு களிக்குமாறு அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற அருளரசே! நின்னுடைய பெரும் புகழ் பொருந்திய சிவந்த திருவடிகளில் என் சொல் மாலையை அணிந்தருளுவாயாக. எ.று.

     புகை தோற்றுவிக்கும் உலகியல் கற்பூரம் போலாது புருவ நடுவாகிய இலாடத்தானத்தே அகக்கண் கண்டு களிக்குமாறு தெய்வக் கற்பூரவிளக்குப் போல்பவன் சிவபெருமான் என்பது விளங்க, “கண் களிக்கப் புகை சிறிதும் காட்டாது புருவக் கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” என்று குறிக்கின்றார். புருவக் கலையாவது இரு புருவங்கட்கும் இடைவெளியதாகிய இலாடத்தானம். அகக்கண் கொண்டு புறத்தைக் காண்பார்க்கு இலாடத்தின் நடுவே ஞான வொளி விளக்காய் மணம் கமழத் தோன்றுதலின், “புருவக் கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” என விரித்துரைக்கின்றார். பண் நிறைந்த பாட்டில் இசையும் பொருளும் அமைந்து இன்பம் செய்தலால் அதனை, “பண் களிக்கப் பாடுகின்ற பாட்டில் விளை சுகம்” எனப் பராவுகின்றார். மெய்யன்பருடைய உள்ளத்தில் அன்பு முதிர முதிர இன்பம் ஊற்றெடுத்துப் பெருகுதலால் அதற்கேதுவாகிய பரம்பொருளை, “பத்தருளே தித்திக்கப் பழுத்த தனிப் பழமே” எனப்பாடுகின்றார். வேதங்கள் உமாதேவியை வாழ்த்துகின்ற இயல்பைத் தெரிவித்தற்கு, “மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாமப் பெண்” என்று சிறப்பிக்கின்றார். உமையாள் காண அம்பலத்தில் ஆடுகின்றானாதலால் கூத்தப் பெருமானை, “வாமப் பெண் களிக்கப் பொது நடஞ்செய் நடத்தரசே” என்று போற்றுகின்றார்.

     (19)