4109.

     உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
          உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
     பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
          பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
     மருஒழியா மலர் அகத்தே வயங்குஒளி மணியே
          மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
     திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
          சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.

உரை:

     உருவெளியாய்த் தோன்றும் பரம்பொருளே! அவ்வுரு வெளியில் நிலவும் வெளியுருவாயவனே! உருவின் நடுவிலும் வெளியின் நடுவிலும் ஓரொப்ப நிற்கின்ற ஒரு பொருளே! பெருவெளியாகிய பெருமானே! அப் பெருவெளியில் விளங்குகின்ற பெரிய சோதிமயமான சிவமே! அப் பெரிய சோதியின் நடுவே உயர்கின்ற ஒப்பற்ற பரம்பொருளே! மணம் நிறைந்த மலரின்கண் விளங்குகின்ற ஒளியே! மணியும் மந்திரமும் மதிக்க வொண்ணாத மருந்தும் சாத்திரமுமாகிய சிவனே! கண்டார் விரும்பும் அழகு மிக்குயர்ந்த மணி யிழைத்த அம்பலத்தில் ஆடல் புரிகின்ற கூத்தப் பெருமானே! சிறுமை யுடையதென்று புறக்கணிக்காமல் என் சொன் மாலையைத் தோளில் அணிந்து மகிழ்ந்து அருளுக. எ.று.

     உருவெளி - பரந்த வெளியில் கண்ணுக்கு உருவாய்த் தோன்றும் கருத்துப் பொருள். உருவாய்த் தோன்றும் பொருளையும் அதற்கிடமாகிய பொருளையும் தனி முறையில் எடுத்து அவ்வெளி நடுவில் விளங்கும் உருவை மனக் கண்ணில் கண்டு அதனைச் சிவமாகக் கொண்டு, “உருவெளிக்குள் உற்ற வெளி யுருவே” எனவும், உருவின் நடுவிலும் வெளியின் நடுவிலும் நோக்கிச் சிவமே நிலவக் கண்டு, “உருநடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே” எனவும் உரைக்கின்றார். அவ்வுரு வெளிக் கிடமாகிய பரந்த வெளியை, “பெருவெளி” என்றும், அப்பெரு வெளியில் தோன்றித் திகழ்கின்ற பேரொளியை, “பெருவெளியில் பெருஞ் சோதி மயமே” என்றும், அப் பெரிய சோதியின்கண் நுண்ணிதாய்ப் புலப்படும் பரம்பொருளைச் சிவமாகக் கருதி, “பெருஞ் சோதி மய நடுவே பிறங்கு தனிப் பொருளே” என்றும் கூறுகின்றார். மணம் மிக்க மலர் மலர்ந்தவிடத்துக் காணப்படும் அழகிய ஒளி போல் சிவம் உறைவது பற்றி, “மரு ஒழியா மலரகத்தே வயங்கும் ஒளியே” என்று உரைக்கின்றார். மணியும், மந்திரமும், மருந்துமாய் உயிர்கட்கு நலஞ்செய்தலின், “மணியே மந்திரமே மதிப்பரிய மருந்தே” எனவும், இவற்றின் நலங்களை உரைக்கும் சாத்திரங்களை, “தந்திரம்” எனவும் குறிக்கின்றார். மணி, மந்திரம், மருந்து என்பதே முறையாயினும் செய்யுளாதலின் மாறி நின்றது. தந்திரம் - நூல். மதிப்பரிய என்பதை மணியோடும் மந்திரத்தோடும் கூட்டுக. திரு - கண்டார் விரும்பும் அழகும் ஒளியுமாம். சிறுமொழி, குற்றமுடைமையால் சிறுமை யுற்ற மொழி. மொழி - சொல். ஈண்டு ஆகுபெயராய்ச் சொன் மாலை மேலதாயிற்று.

     (20)