4112. சாதிகுலம் சமயம்எலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
உரை: சாதி என்றும் குலம் என்றும் சமயம் என்றும் பேசப்படும் வேறுபாடுகள் எல்லாவற்றையும் போக்கி மேன் நிலையில் என்னையிருத்தி ஒப்பற்ற அருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தருளிய சிறந்த தலைமைப் பொருளாகியவனே! முதல், இடை, கடை எனப் பிரித்துக் காட்டாமல் அண்டங்களிலும் வெளி அண்டங்களிலும் அவற்றுள் நிறைந்திருக்கும் உயிர்களிலும், அகமும், புறமும், அகப்புறமும், புறப்புறமும் எல்லாவற்றிலும் நிறைந்து விளங்குகின்ற ஒளியாகியவனே! நூல் பலவும் ஓதி யுணர்ந்த பெரியோர்கள் எல்லாம் என்னை யடைந்து கேட்குமாறு என்னை ஒன்றும் ஓதாமலே யுணர்ந்து உரைக்கத் தக்க உணாவாகிய நல்லுருவு பெறச் செய்த என்னுறவே! அம்பலத்தின்கண் ஒளி மயமாய் விளங்கி நின்று நடிக்கும் தூய நடராசப் பெருமானே! என்னுடைய சொன் மாலையையும் ஏற்று மகிழ்ந்தருளுவாயாக. எ.று.
உலகியலில் மக்களிடையே நிலவும் சாதி வேற்றுமை, குல வேற்றுமை, சமய வேற்றுமை ஆகிய வேற்றுமை பலவற்றையும் நோக்காது போக்கி அவற்றுக் கெல்லாம் மேலாய் உயர்த்தி, அவையனைத்தையும் ஒன்றாய்ச் சமமாய்க் கருதத் தக்க சமரச ஞானமாகிய திருவருள் உணர்வைத் தனக்கு நல்கினமை புலப்பட வடலூர் வள்ளல், “சாதி குலம் சமயமெலாம் தவிர்த்து எனை மேலேற்றித் தனித்த திருவமுது அளித்த தனித் தலைமைப் பொருளே” என்று சாற்றுகின்றார். அண்டங்களிலும், அண்டங்கட்கு வெளியே உள்ள அண்டங்களை, “பகிரண்டம்” என்பர். அண்டங்கள் தோறும் எண்ணிறந்த உயிர்கள் வாழ்தலால், “ஆருயிர்கள்” என வுரைக்கின்றார். அகம் புறம் மற்றனைத்தும் என்பதில் மற்றனைத்து என்பது அகப்புறத்தும், புறப்புறத்தும் உள்ள பிரிவுகளை உணர்த்திற்று. அண்டங்களிலும் பகிரண்டங்களிலும் அவற்றில் உறையும் உயிர்களிலும் ஆதி என்றும், அந்தமென்றும், நடுவென்றும் உள்ள பகுதிகள் அனைத்திலும், அவற்றின் அகத்தும் புறத்தும், அகப்புறத்தும், புறப்புறத்தும் எங்கும் நிறைந்து சிவத்தின் அருளொளி பரவுவதால், “ஆதி நடுக் கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆருயிர்கள் அகம் புறம் மற்றனைத்தும் நிறை ஒளியே” என்று உரைக்கின்றார். கற்றறிந்தவர் பலரும் ஐயம் தெளியுமாறு தம்மைப்பணிந்து கேட்கத்தான் வீற்றிருந்து உரைக்கும்வண்ணம் பன்னூல்களையும் ஓதாதே உணர்ந்துரைக்க வல்ல ஒள்ளிய ஞான நிலை தமக்கு எய்தியமை புலப்பட, “ஓதி யுணர்ந்தவர் எலாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச் செய்யுறவே” என இசைக்கின்றார். சோதி மயம் - ஞானவொளி மயம். என் சொல் - யான் தொடுத்திருக்கின்ற சொன் மாலை. (23)
|