4113. அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
உரை: என்னுடைய அகத்திலும் புறத்திலும் அடிக்கடி தோன்றி, அருளொளி உருவாய்த்திரிந்து தோன்றி அருளுகின்ற திருவருட் செம் பொருளே! உலகின்கண் அளவில்லாத வேதங்களின் முடிமேலும் ஆகமங்களின் முடிமேலும் தோய்ந்த திருவடியை என் தலைமேல் பதிவித்த ஒப்பற்ற தலைவனே! திருநீறு அணிந்த பொன்னிறத் திருமேனியின்கண் நறுமணமும் கற்பூரப் பொடியின் மணமும் கலந்து என் அகத்திலும் புறத்திலும் புது மணம் கமழச்செய்யும் அமுதமாகியவனே! பொன்னம்பலமாகிய திருச்சிற்றம்பலத்தின்கண் திருவடி பொருந்த திருக்கூத்தாடுகின்ற அருளரசாகிய சிவனே! என் சொன்மாலையை ஏற்று அணிந்தருளுக. எ.று.
தம்முடைய மனத்தின்கண்ணும், தமக்குப் புறத்திலும் அடிக்கடி அருளொளியுருவாய் ஆங்காங்குத் தோன்றித் தமக்குக் காட்சி தந்தமை இனிது விளங்க, “அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய்த் திரிந்து திரிந்து அருள்கின்ற பொருளே” என்று புகல்கின்றார். சோதியுருவாய்த் திரிந்து திரிந்து அருள்வது, “உலப்பிலா ஆனந்தமாய்த் தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே” (பிடித்த) என்ற மணிவாசகத்தை நினைப்பிப்ப துணர்க. படி - உலகம். வேதங்களில் உரைக்கப்படுகின்ற மந்திரங்கள்
எண்ணிறந்தனவாதல் பற்றி, “அளவில் மறை” என உரைக்கின்றார். வேதத்தின் முடிவிலும் ஆகமத்தின் முடிவிலும் பரசிவத்தின் திருவடி ஞானம் விளங்குதலின், “மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல் பதிந்த பதம்” எனவும், அத் திருவடி ஞானம் தமக்கும் எய்தினமை தோன்ற, “என் முடிமேல் பதித்த தனிப் பதியே” எனவும், திருநீறு அணிந்த பொன்னிறமேனியை, “பொடிக் கனகத் திருமேனி” எனவும், தமது திருமேனியின்கண் சிவ மணமும் கற்பூர மணமும் உள்ளும் புறமும் ஒப்பக் கமழ்வது பற்றி, “திருமேனித் திருமணம் கற்பூரப் பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணஞ் செய் அமுதே” எனவும் போற்றுகின்றார். சிவத்தின் திருமேனி பொன்னிறமாதலின் அதன்கண் எழும் சிவ மணத்தைக் “கனகத் திருமேனித் திருமணம்” என்று சிறப்பிக்கின்றார். தில்லையிலுள்ள பொன்னம்பலத்தில் திருச்சிற்றம்பலம் உளதாகலின், “கனக அம்பலத்தே திருச்சிற்றம்பலத்தே” என்று சிறப்பித்துக் காட்டுகின்றார். அலங்கல் - மாலை. (24)
|