4114.

     அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
          அசையாதே அவியாதே அண்டபகிர் அண்டத்
     துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
          தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
     மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
          மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
     இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
          இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

உரை:

     மோதுதலின்றி மிக்கெழும் பெருங்காற்று வந்து அடித்தாலும் சிறிதும் அசைவதும் அவிவதுமின்றி, அண்ட பகிரண்ட வகைகள் யாவிலும் பிண்ட வகைகள் முழுவதும் ஒளி பெறத் தூண்டுதலின்றித் திகழ்கின்ற அருட்சோதியையுடைய அழகிய விளக்குப் போல்பவனே! மறைவதும், தேய்வதும், களங்க மடைதலும் இல்லாமல் மக்கள் உயிரை மயக்குவதும், நடுக்குவதும் செய்யாத முழுத் திங்கள் போல்பவனே! எவ்வுயிரிடத்தும் அகத்தும் புறத்தும் தங்குபவனாய் விளங்குகின்ற கூத்தப் பெருமானே! யான் இசைக்கின்ற சொன் மாலையை அணிந்தருள்வாயாக. எ.று.

     அறைதல் - மிக்கு நின்று தாக்குதல். உலகியல் விளக்குகள் காற்றடித்தால் அசைவதும் அவிதலும் இயல்பாதலால் அவற்றின் நீக்குதற்கு, “மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே தூண்டாதே விளங்குகின்ற சோதி மணி விளக்கே” என்று சொல்லுகின்றார். சிவத்தின் அருளொளி தோயாத இடம் எங்குமில்லை என்பது புலப்படுத்தற்கு, “அண்ட பகிரண்டத் துறையாவும் பிண்ட வகைத் துறை முழுதும் விளங்க” என்று உரைக்கின்றார். அண்டம் - பெரியது. பிண்டம் - சிறிய அணு வுருவானது. சிவபெருமானைப் பூரண சந்திரனாக வைத்துப் புகழ்கின்றாராதலால் அச் சந்திரனிடத்து உள்ள குறைகளெல்லாம் போக்குதற்கு, “மறையாது குறையாது களங்கமும் இல்லாது மயக்காது பனிக்காது வயங்குகின்ற மதியே” என்று இயம்புகின்றார். நில வொளிக்கு மக்களை மயக்கம் உறுவிப்பதும், குளிரால் நடுங்கச் செய்வதும் இயல்பாதலால், “மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே” என மொழிகின்றார். இறை, இறைவன்; எங்கும் தங்குபவன். எவ்வுயிரிடத்தும் உயிர்க்குயிராய்த் தங்கும் இயல்பினனாதலின், “எவ்வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இறையாய் இலங்கும் அரசே” என இயைக்க. இசை, ஈண்டு இசைக்கின்ற சொல். மாலை மேற்று.

     (25)