4115. பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
உரை: கண்களால் பார்த்தாலும், மனத்தால் நினைத்தாலும், வாயாற் படித்தாலும், பிறர் படிக்கப் பக்கத்தே நின்று செவியாற் கேட்டாலும், கேட்ட பொருளை ஆர்வத்தோடு உள்ளத்தில் உணர்ந்தாலும், கைகளால் இழுத்தாலும், பிடித்தாலும், கட்டியணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கின்ற இனிய சுவை பொருந்திய கரும்பு போல்பவனே! வெம்மையுற்றுக் கயங்காமல் கனிந்து முதிர்ந்த மணமிக்க மாங்கனி போல்பவனே! சத்து, சித்து, ஆனந்தமாகிய மூன்றையும் விளங்கச்செய்யும் திருவருள் ஞான அமுதமே! தீர்த்தனே என்று மெய்யன்பர்கள் எல்லாம் தொழுது வணங்க அம்பலத்தின் தெய்வ நடம் புரிகின்ற சிவபெருமானே! சிறியவனாகிய எனது சொன் மாலையை ஏற்றருளுக. எ.று.
உலகியற் கரும்பாலையில் இட்டு ஆட்டியும் துண்டு துண்டாக வெட்டி மென்றும் சுவைக்கும் இயல்பினதாக, இச் சிவக்கரும்பு பார்த்தாலும், நினைத்தாலும், படித்தாலும் படிக்கப் பக்க நின்று கேட்டாலும், பரிந்து உள்ளுணர்ந்தாலும், ஈர்த்தாலும், பிடித்தாலும், கட்டியணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் ஏற்றமுடையது” என்று இயம்புகின்றார். வெயில் வெம்மையால் வெதும்பியும், மேல் தோல் சுருங்கியும் கனியும் உலகியல் மாங்கனி போலின்றித் தனக்குரிய நலம் குறைதலின் இன்பமாய் இயலுதலின் சிவமாகிய கனியை, “வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனி” என்று விளம்புகின்றார். மெய்ம்மை, அறிவு, ஆனந்தம் என்ற மூன்றும் முறையே சத்து, சித்து, ஆனந்தம் என வழங்கும். இதுவே சச்சிதானந்தம் எனவுமாகும். சச்சிதானந்தத்தின் உண்மைத் தன்மையையுணரும் அறிவு சிவஞானத்தால் விளங்குவது பற்றி “மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருளமுதே” என்று போற்றுகின்றார். சிவபெருமானை, “பூந்துருத்தி நகர் தீர்த்தன்” என்று திருநாவுக்கரசர் பாடிப் பரவுதல் பற்றி, “தீர்த்தா என்றன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்தரசே” என்று பாராட்டுகின்றார். தமது எளிமையைப் புலப்படுத்தற்கு அருள் விளக்கச் சொன்மாலையை, “சிறு மொழி” என்று கூறுகின்றார். (26)
|