4116.

     பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
          படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
     உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
          உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
     சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
          சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
     முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
          முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.

உரை:

     பொருள்களைப் பற்றுவதும், பற்றாமல் விடுவதும், பற்றிய பொருளுக்குள் ஒடுங்குவதும், மீளவும் புகைந்து ஓங்குவதும், சுடுவதும், தீண்டிய பொருளைச் சுட்டுப் புண்ணுறுவிப்பதுமின்றி, ஒளி மிக்கு ஓங்குவதும், எவ்விடத்தும் தன்மயமாய் ஞானவுருக் கொண்டு உயிர்க்குயிராய் விளங்குகின்ற நெருப்பைப் போல்பவனே! வளைந்தெழுதலும், ஒளிர்ந்து தோன்றுவதும், தோன்றாது மறைதலும், சுரீல் எனச் சுடுதலும் இல்லாமல் எப்பொழுதும் விளக்கமுறுகின்ற சுடர் போன்றவனே! முழுதுமுணர்ந்த ஞானிகளின் உள்ளத்திலும் திருச்சிற்றம்பலத்திலும் நடம் புரிகின்ற அருளரசே! என்னுடைய சொன்மாலையை ஏற்று அணிந்தருளுக. எ.று.

     பற்றுதற்குரிய பொருள்களைப் பற்றியெரிப்பதும், அல்லாதவற்றைத் தீண்டாதொழிவதும் தீக்கு இயல்பாதலின், “பற்றுதலும் விடுதலும் இல்லாது” எனவும், சில பொருள்களில் உள்ளே கனைந்து பின்புறத்தே விளங்குவது பற்றி, “உள்ளடங்குதலும் மீட்டும் படுதலும் சுடுதலும் இல்லாது” எனவும் இசைக்கின்றார். நீர்க்குள் அடங்குவதும் மிகுவதும் காண்க. தீச் சுட்ட வுடம்பின்கண் புண்ணுண்டாதலால், “புண் படுத்தலும்” எனவுரைக்கின்றார். ஒளியுடன் உயர்ந்து தன்னைச் சார்ந்த பொருளையும் தன்னுடைய நிறமும் தன்மையும் உடையதாக்கும் நெருப்புப் போலத் தன்னைச் சார்ந்தாரைச் சிவஞானவுருவினராக்குவது விளங்க, “தன்மயமாய் ஞானவுருவாகி” எனவுரைக்கின்றார். வெச்சென்று சுடுதல் - சுரீல் எனச் சுடுதல்; குறிப்பு மொழி. முற்றும் உணர்ந்தவர் - முழுதுணர்ந்த சிவஞானிகள். ஞானிகளில் தூயவுள்ளத்தில் எழுந்தருளுவது பற்றி, திருச்சிற்றம்பலத்தோடு ஒப்ப நிறுத்தி ஓதுகின்றார். முயங்குதல் - ஈண்டுக் கலந்து நின்று ஆடுதல் மேற்று.

     (27)