4117. ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
உரை: நில முதலிய பூதங்கள் ஐந்தனுள் நிலத்துக்கு மேலனவாகிய பூதங்கள் நான்கினும் அவற்றிற்குள் அடுத்தடுத்து நிற்கும் புறமும் அகமுமாகிய தூலமிரண்டும் சூக்குமம் அதிசூக்குமமிரண்டும் என நந்நான்காய் விரியும் பூத வகைகளிலும், அகம், புறம், நடு, மேல், கீழ் எனக் கூறுபடும் வான முதலாக நிற்கும் பூதங்கள் எல்லாவற்றினும் தன்மயமாய்க் காணப்படும் அவற்றுக்கு அப்புறமாய்க் கலந்து நிற்பதாகிய தனிக் கனலாகிய பெருமானே! செவ்விய பூத வகைகளாகிய உலகங்களும், இத்தகைய பூதங்களையுடைய அண்ட வகைகளும் செழிப்புடன் விளங்க நல்ல கிரணங்களைப் பரப்பியிலங்குகின்ற சுடராகிய பரம்பொருளே! வெவ்விய மாயா காரியமாகிய நில முதலிய பூதங்கள் விளைவிக்கும் தடைகளையறுத்துயர்ந்தோர் வழிபடும் வகையில் அழகிய அம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் அருளரசாகிய சிவ பெருமானே! நான் சொல்லும் சொன் மாலையையும் அணிந்தருளுவாயாக. எ.று.
ஐம்பூதங்கள் நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன. நிலமாகிய பூதத்துக்கு மேலுள்ளன நீர் முதல் நான்கும் பரம் எனப்படுகின்றன. ஒவ்வொரு பூதமும் அகம், புறம், தூலம், சூக்குமம் என நான்கு கூறுபட்டு, தூலம் அகமும் புறமுமாதல் போலச் சூக்குமமும், சூக்குமம் அதிசூக்குமமென இரண்டாதலின், அவற்றுள்ளே அடுத்திடும் நன்நான்கும் என்றும், ஒவ்வொன்றும் அகம், புறம், மேல், கீழ், நடு எனப் பக்கக் கூறுகளைப் பெறுவதால், “அகம் புறம் மேல் நடுக் கீழ்ப் பூத பக்க முதல் எல்லாம்” என்றும் எடுத்தோதுகின்றார். கம்பூதம், வானமாகிய பூதம். இக்கூறுபாடுகள் வானமாகிய பூதத்துக்கும் உண்மை புலப்படுத்தற்கு, “கம்பூத பக்க முதல்” எனக் கூறுகின்றார். பூதம் ஐந்தினும் அவற்றைத் தன்கண் அடக்கி நிற்கும் அண்டவெளியிலும் நீக்கமறக் கலந்தொளிர்வதால் சிவத்தைக் கனலாக வைத்து, “அவற்று அப்புறமும் கலந்த தனிக் கனலே” என்று போற்றுகின்றார். பூத காரியக் கனலின் வேறுபடுத்தல் வேண்டி, “தனிக் கனலே” எனச் சிறப்பிக்கின்றார். அகமும் புறமும் தூலமும் சூக்குமமும் எனப் பகுக்கப்படாத நிலையில் பொது வகைப் பூதங்களாகப் புகல்கின்றமை விளங்க, செம்பூதவுலகங்கள்” என்று செப்புகின்றார்; இடைச் சொல் முதலியன கலவாத சொற்களைச் “செஞ்சொல்” என வழங்குதல் போல என்க. பல்வகையுலகங்களையும் உலகந்தோறும் பல்வகை பூதங்களையும் தன்னுட் கொண்டது அண்டமெனத் தெரிவித்தற்கு, “பூதாண்ட வகைகள்” என மொழிகின்றார். கனலிடத் தெழும் ஒளிச்சுடர் போலச் சிவமாகிய கனலிடத்தில் எழும் அருட் கதிர்த் தண்சுடரைச் சிறப்பித்தற்கு, “நற்கதிர் பரப்பித் திகழ்கின்ற சுடரே” என விளம்புகின்றார். மாயா காரியமாதலால் நில முதலிய பூதங்கள் தன்கண் வாழும் உயிர்கட்கு உலகியற் பற்றை விளைவித்துச் செம்பொருளாகிய சிவத்தை நாடா வகையில் தடைசெய்வது கண்டு சிவஞானச் செல்வர்களை, “வெம்பூதத் தடை தவிர்த்தார்” என்று போற்றுகின்றார். விளிம்பு, முதனிலைத் தொழிலாகுபெயர். (28)
|