4118. வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
உரை: பிணக்கம் செய்யும் கண் முதலிய இந்திரியங்களையியக்கும் மன முதலிய கரணங்களாகிய நான்கும், அவற்றை அகம், புறம், தூலம், சூக்குமம் என வகுக்க வரும் நந்நான்கும், அகம் புறம் மேல் கீழ் நடு எனப் பகுத்துக் கண்டு ஓதப்படும் எல்லாக் கூறுகளிலும் தன்மயமாக்கிக் கலந்து நின்று அக்கரணக் கூறுகட்கு அப்பாலும் சென்று திகழும் அறிவொளியாகிய சிவமே! சூது விளைவிக்கும் இவ்விந்திரிய கரண தத்துவ புவனங்கள் அனைத்தினும் தன் கரணங்களைப் பரப்பி விளங்கும் தனித்த சிவபரஞ் சுடரே! தன்பால் வருவோர் அனைவரும் கண்டு போற்ற அம்பலத்தில் நடம் புரியும் அருளரசே! யான் சொல்லுகின்ற சொன் மாலையை ஏற்று அணிந்தருளுக. எ.று.
கண் முதலிய இந்திரியங்கள் மன முதலிய கரணங்களோடு இணங்கியும் பிணங்கியும் நிலவுதலால், “வாதுறும் இந்திரிய கரணம்” எனவும், இந்திரியங்களுக்குப் பரமாதலின் கரண நான்கினையும், “பரங்கள்” எனவும் இயம்புகின்றார். மன முதலிய நான்கும், அகம் புறம் தூலம் சூக்குமம் என நந்நான்கால் விரிவது கண்டு, “வகுத்திடும் நந்நான்கும்” என்றும், அவை ஒவ்வொன்றிற்கும் அகம், புறம், மேல், கீழ், நடு என்று கூறுதலுண்மையின், “அகம் புறம் மேல் கீழ் நடுப்பால் ஒன்றும் எல்லாம்” என்றும், இவை யாவும் சிவ கரணங்களாகுமிடத்துச் சிவவொளி பெறுதலால், “எல்லாம் தன்வயமாகக் கலந்து ஓங்க அவற்றில் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே” என்றும் உரைக்கின்றார். கரணங்களைத் தத்துவமெனக் கொண்டு அத் தத்துவங்களிலுள்ள புவனங்களிலும், அவற்றைத் தமக்குள் கொண்ட அண்டங்களிலும் சிவத்தின் சுடரொளி பரந்து திகழ்கிறது என்பாராய், “கரணலோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயஞ் சோதிச் சுடரே” என்று சொல்லுகின்றார். ஒளிப் பொருள்கள் யாவும் சிவத்தின் அருளொளியால் திகழ்வது போலாது சிவவொளி தனித்த பேரொளியாதலால், “சுயஞ் சோதிச் சுடரே” எனச் சிறப்பிக்கின்றார். போதுறுதல் - வருதல். (29)
|