4119. பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
பரவியெலாம் தன்மயமாம் படிநிறைந்து விளக்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
உரை: மூலப் பகுதியின் பரமாகிய மான், அகங்காரம், மனம், தன்மாத்திரையாகிய நான்கினும், அவை ஒவ்வொன்றின் அகம், புறம், தூலம், சூக்கும மென்ற நந்நான்கினும் நிறைந்து ஒளி செய்து இவற்றிற்குத் தக நிற்கும் அம்மூலப் பகுதிக்கு அப்புறத்தவாகிய கலை, வித்தை முதலியவற்றிற்கும் அப்பாலும் சென்று, தனித்த ஒளியையுடைய செங்கோலைச் செலுத்தும் அருட் சிவ வொளியே! மிக்கதாகிய பிரகிருதி தத்துவ புவனங்களிலும் அண்டங்களிலும் அருளொளி பரப்பி விளங்குகின்ற சிவ பரம்பொருளே! கூட்டமாயுள்ள தேவர்கள் கூடிநின்று போற்றும் அம்பலத்தில் ஆடல் புரிகின்ற துரிய நடத்தையுடைய பெருமானே! என்னுடைய இச்சொல் மாலையை ஏற்று அணிந்தருளுக. எ.று.
மூலப் பிரகிருதியாகிய மாயை அவ்வியத்த நிலையில் பகுதியாகவும், வியத்த நிலையில் குணம், ஆங்காரம், மனம், தன்மாத்திரை என்று நான்காதலால், “பகுதி பர முதல் நான்கும்” எனக் கூறுகின்றார். நந்நான்கினை மேற்பாட்டுரைகளில் விரித்து உரைத்துக்கொள்க. பிரகிருதியின் கூறுகள் யாவற்றினும் சிவத்தின் தன்மையும் ஒளியும் நிறைந்திருப்பது பற்றி, “எல்லாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கி” எனவும், மூலப்பகுதிக்கு அப்பாலுள்ள வித்திய, தத்துவக் கூறுகட்கும் சிவவொளி பாய்ந்து பரவுகின்றமை விளங்க, “அப்பகுதிக்கு அப்புறமும் சென்றே தனியொளிச் செங்கோல் நடத்தித் தழைக்கின்ற ஒளியே” எனவும் இசைக்கின்றார். தத்துவங்கள் ஒவ்வொன்றிற்கும் புவன வகைகள் கூறப்படுதலால், “பகுதியுலகம் பகுதியண்டம்” என்று பகிர்கின்றார். தொகுதி - கூட்டம். கடவுளர் - தேவர்கள். துரிய நடம் - துரியத்தானத்தில் நின்று சிவம் நடிக்கும் சூக்கும நடனம்! (30)
|