4120.

     மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
          வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
     ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
          அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
     தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
          தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்த பெருஞ் சுடரே
     தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
          தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

உரை:

     மாமண்டலத்தில் பரமாகிய மாமாயை, சுத்தம், அசுத்தம், சுத்தாசுத்தமென்ற நான்கினையும், அவற்றின் நந்நான்கு கூறுகளையும் தன் அருட் சக்தியால் விளங்கச் செய்து அதன் இன்றியமையாமை தோன்றுமாறு அம் மாயைக்குள்ளும் புறத்தும் நிறைந்து அறிவுவடிவாய் விளங்குகின்ற சிவவொளியே! மாயா புவனங்களிலும் மாய அண்டங்களிலும் அவை தழைக்குமாறு கலந்து நின்று ஒளி செய்கின்ற தனிப் பெருஞ்சுடரே! தேவனாகிய திருமாலும் பிரமனும் நின்று போற்ற அம்பலத்தில் தெய்வ நடம் புரியும் சிவபெருமானே! எளிய என் சொன்மாலையைத் தோளில் ஏற்று அணிந்தருளுக. எ.று.

     சிவசத்தியில் ஒடுங்கியிருக்கும் மாயை, சிவசத்தி கலக்கக் கலக்குண்டு சுத்தம், அசுத்தம், சுத்தாசுத்தம் என நிற்பது கொண்டு, “மாமாயைப் பரம்” என வுரைக்கின்றார். இவற்றையும் நந்நான்காய்ப் பிரித்துக் காணும் வகையில், “அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும்” என்றும், அவற்றின் அகத்தும் புறத்தும் அறிவொளியாய்ச் சிவம் நிறைவது புலப்பட, “நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி” என்றும், இக்கூறுகள் அனைத்திலும் அறிவு வடிவாய்ச் சிவவொளி பரவுதல் விளங்க, “அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே” என்றும் இயம்புகின்றார். மாயையும் தத்துவக் கூறுகளிலும் புவனங்களும் அண்டங்கள் கூறப்படுதலால் அவற்றையும் ஈண்டுக் கூறுகின்றார். தே - தேவு; தெய்வமுமாம்.

     (31)